``ஸ்டாலினோடு நேருக்கு நேர் மோதியவன் நான்” -முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அதிரடி

தஞ்சாவூரில் நடந்த  அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், `ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் ஊழல் எனப் பேசி குற்றம் சாட்டுகிறார். நான் சட்டமன்றத்தில் ஸ்டாலினோடு பல முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறேன். ஊழலைப் பற்றிப் பேச அவருக்கு அருகதை இல்லை’ என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 

தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 110 -வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அ.தி.மு.க கூட்டம் என்றாலே இரட்டை இலை சின்னம் முக்கியம் இடம் பிடிக்கும். ஆனால், இந்தக் கூட்டத்துக்காக  அமைக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. கட்சியின் சின்னமான இரட்டை இலையை மட்டும் போட மறந்து விட்டனர். இது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா சின்னத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார். தேர்தலில் யார் என அறிமுகமே இல்லாத வேட்பாளரை நிற்க வைத்து வெற்றிபெற வைப்பார்.  அதற்கு காரணம் இரட்டை இலைச் சின்னம்தான். அவர் மறைவுக்குப் பிறகு கட்சியில் என்வெல்லாமோ நடக்கிறது. அண்மையில்  நடைபெற்ற அ.தி.மு.க-வின் சேனல் தொடக்க விழாவில் கூட ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்கள் இடம்பெறவில்லை. தற்போது கட்சிக் கூட்டத்திலும் இரட்டை இலைச் சின்னம் இடம் பெறவில்லை இப்படியே போனால் ஜெயலலிதாவையே மறந்துவிடுவார்களோ என நினைக்க தோன்றுகிறது என  வேதனையோடு புலம்பியதை பார்க்க முடிந்தது.

இதில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம், ``ராஜபக்‌ஷே சொல்கிறார் இலங்கையில் நடந்த போருக்கு உதவி செய்தது இந்திய அரசுதான் என்று. இந்திய அரசு என்றால் அப்போது கூட்டணியோடு ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வும் தான். தமிழ் இனத்துக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது வேஷமிடுகிறார்கள். ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் ஊழல் எனப் பேசி குற்றம் சாட்டுகிறார். நான் சட்டமன்றத்தில் ஸ்டாலினோடு பல முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறேன். அதனால் சொல்கிறேன் மொழி, தமிழ் இனம், குடும்ப அரசியல் இப்படி எதைப் பற்றியும் பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. எல்லோரும் நினைக்கிறார்கள் எப்படியாவது அ.தி.மு.க-வை கைப்பற்றி விடலாம் என்று. ஆனால், அது முடியாது. தினகரன், ஸ்டாலின், ரஜினி, கமல் என யாராக இருந்தாலும் அ.தி.மு.க-வை கைப்பற்ற முடியாது. ஜெயலலிதா சொன்னது போல் நூறு ஆண்டு காலம் இந்தக் கட்சி எழுச்சியோடு இருக்கும்” எனப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!