வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (17/09/2018)

கடைசி தொடர்பு:15:02 (17/09/2018)

'நெடுஞ்சாலைத் துறை ஊழலில் சி.பி.ஐ விசாரணை!?' - தி.மு.க-வின் அடுத்த மூவ்

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தமிழகத்தின் பெரும்பாலான நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் திட்டங்களில் முறைகேடு நடந்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், "இந்தத் திட்டங்களை முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக  இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன்மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார்” என்று புகார் அளித்தார். இந்தப் புகார்மனுமீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார்.

இந்த வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இன்று தாக்கல்செய்த பதில் மனுவில், “தமிழக அரசினால் விடப்பட்ட டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று பதில்மனு தாக்கல்செய்துள்ளது. நீதிபதி, டெண்டருக்கு அளிக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில்,  “தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் முழுமையான விசாரணை அறிக்கையைத் தாக்கல்செய்வார்கள் என்று நம்புகிறோம். அவர்கள் விசாரணை எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தாக்கல்செய்ய உள்ளோம்” என்கிறார் ஆர்.எஸ்.பாரதி. ஏற்கெனவே, தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கினால்தான் குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. அதே நிலை, இப்போது நெடுஞ்சாலைத் துறைக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் அ.தி.மு.க-வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.