வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (17/09/2018)

கடைசி தொடர்பு:15:32 (17/09/2018)

அசுதோஷ் சுக்லாவை அலறவிட்ட புழல் ஜெயில் அதிகாரிகள்!

புழல் சிறை

புழல் ஜெயிலில் உள்ள தண்டனைக் கைதிகள், சிறைக்குள் உல்லாசமாக வாழ்க்கை நடத்திவருவது சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. குறிப்பாக, உயர்பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் சர்வதேச கைதிகள் மற்றும் முக்கியக் கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் சிலர், சிறைக்குள் மெத்தை, டிவி, செல்போன், உயர் ரக உணவு என வெளியுலகுக்குச் சிறிதும் குறைவில்லாத அளவுக்குச் சுகபோக வாழ்க்கையைச் சிறைக்குள் அனுபவித்து வந்தது புகைப்படங்கள் மூலம்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாகப் புழல் சிறைக்குள் அதிரடி ஆய்வு செய்யப்பட்டு, செல்போன், டிவி, சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் ஆய்வு நடத்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார். 

அசுதோஷ் சுக்லாஇந்நிலையில், சிறைத்துறை டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா புழல் சிறைக்கு நேரடி விசிட் செய்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒட்டுமொத்த சிறையையும் சுற்றிக்காட்டச் சொல்லி ஆய்வு மேற்கொண்டார். சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தவர், “சிறைக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் ஜாமர் கருவியைச் சிறையி்ல் பொருத்த சொல்லியுள்ளோம். புழல் சிறையில் ஜாமர் கருவி எங்கெல்லாம் பொருத்தப்பட்டுள்ளது” என்று டி.ஜி.பி கேட்டதும், அதிகாரிகள் அவரைச் சிறையின் மூன்று கதவுகளைத் தாண்டி அழைத்துச் சென்றுள்ளனர். ஒருகட்டத்தில், சிறையின் மையப்பகுதியில் உள்ள உயர்மட்ட பாதுகாப்பு அறைக்குள் அழைத்துச் சென்றவர்கள் அங்கிருந்த அறை ஒன்றுக்குள் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளதைக் காட்டியுள்ளார்கள். இதைப் பார்த்து அரண்ட டி.ஜி.பி, “இவ்வளவு பெரிய சிறைக்கு இந்தச் சிறிய அறையில் மட்டும் ஜாமர் கருவியை வைத்திருந்தால் குற்றவாளிகள் செல்போன் பேசாமல் வேறு என்ன செய்வார்கள்” என்று எகிறியவர், "எதற்காக வெளிப்பகுதியில் ஜாமர் பொருத்தவில்லை" என்று கேட்டுள்ளார். அதற்கும் அவர்கள் சலிக்காமல், “வெளியில் ஜாமர் பொருத்தினால், ரோட்டில் போகும் பொதுமக்களுடைய செல்போன்கள் வேலை செய்யாமல் போனால் என்ன செய்வது” என்று அதிகாரிகள் சொன்ன விளக்கத்தால், அரண்டுபோய் உள்ளார் டி.ஜி.பி. சிறைக்குள் இருக்கும் அதிகாரிகளே செல்போன் பயன்பாட்டுக்கு உறுதுணையாகியிருப்பது, அவரது விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில், புழல் சிறைக்குள் அதிரடி மாற்றங்கள் நடைபெறும் என்கிறார்கள் சிறைத்துறையினர்.