Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை விடுவித்தது இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை விடுவித்தது இலங்கை
ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை விடுவித்தது இலங்கை

ராமேஸ்வரம்: கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
 

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை விடுவித்தது இலங்கை

கடந்த மாதம் 13ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 4 விசைப்படகுகளில் 19 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பிடித்து சென்றனர்.

இதன் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை கடந்த மாதம் 22ஆம் தேதி வரை சிறையில் வைக்க மன்னார் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 22ஆம் தேதி மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மீனவர்களை இன்று வரை சிறை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 19 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்திய மன்னார் நீதிபதி சர்புதீன், ‘இனிமேல் எல்லை தாண்டி வரக்கூடாது’ என்ற எச்சரிக்கையுடன் 19 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து மீனவர்கள் அனைவரும் விடுக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 19 பேரும் இரண்டொரு நாளில் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேரும் தற்போது இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இரா.மோகன்