வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (19/09/2018)

கடைசி தொடர்பு:00:00 (19/09/2018)

``தூர் வாரும் பணிக்காக ஒதுக்கிய நிதி என்னானது?’’ -முதல்வருக்கு டிஆர்.பாலு கேள்வி!

’தூர் வாரும் பணியில் முறைகேடு நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது’ என தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் டிஆர்.பாலு தெரிவித்தார்.

பாலு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அரசைப் பதவி விலகக் கோரியும்,  ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அனைத்துக் கட்சி  சார்பில் தஞ்சாவூரில் தலைமைத் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மைச் செயலாளரான டிஆர்.பாலு, அதன்  நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள்  பலர் கலந்துகொண்டனர். மேலும்,  அ.தி.மு.க அரசுக்கு எதிராகக் கடுமையான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர்,  தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு பேசுகையில்,  ``கடந்த 1997 -98 -ம் ஆண்டில் பெட்ரோல் 5.18 மில்லியன் டன்களும், டீசல் 36 மில்லியன் டன்களும் தேவைப்பட்டன. தற்போது, பெட்ரோல் 26.18 மில்லியன் டன்களும், டீசல் 81 மில்லியன் டன்களும் தேவைப்படுகின்றன. பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரிக்கும்போது, கலால் வரி மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும். இதன்மூலம், மத்திய அரசு கஜானா நிறைந்து வழியும். ஐக்கிய முற்போக்கு அரசின் ஆட்சியில், 2014 -ம் ஆண்டில் கலால் வரி மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்த வருவாய் 9,918 கோடி ரூபாய். இது, 2017 மற்றும் 18 -ம் ஆண்டில் 2.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வளவு வருவாய் கிடைத்தாலும் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கலால் வரி விதிக்கிறது. ஆனால், விலையைக் குறைக்க மத்திய அரசால் முடியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர உயர விலைவாசியும் உயரும். மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைத் தவிர்க்கலாம். ஆனால், அதைச் செய்ய மத்திய அரசு முன்வருவதில்லை. 

போராட்டம்

பல முனை வரிகளைத் தடுக்கவே ஜிஎஸ்டி கொண்டுவந்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பெட்ரோல், டீசலை மட்டும் மத்திய அரசு ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரவில்லை. ஜிஎஸ்டி விதித்தால் அதிக பட்சம் 28 சதவீதத்துக்கு மேல் விதிக்க முடியாது  என்பதால், அதை பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு அமல்படுத்தவில்லை.  இதனிடையே,  கடந்த 2014 -ம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை கலால் வரியை பா.ஜ.க அரசு உயர்த்தியுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வரி மூலம் மத்திய அரசின் கருவூலம் நிரம்புகிறது. பெட்ரோலியப் பொருள்கள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்துவந்த மொத்த வருவாய் 7 சதவிகிதத்தில் இருந்து தற்போது 14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சாதாரண மக்கள்மீது வரியைத் திணிப்பதால் ஏழைகள் தவிக்கின்றனர். ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பெரு நிறுவனங்களுக்கு  36 சதவிகித வரி வசூலிக்கப்பட்டது. அது இப்போது 28 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சி ஏழை மக்களுக்கு இல்லாமல் பணக்காரர்களுக்கான அரசாக  இருக்கிறது. இதேபோல தமிழக அரசு தூர் வாரும் பணிக்காக ரூ.4.735 கோடி ஒதுக்கீடு செய்தது. அது என்ன ஆனது என்பதே தெரியவில்லை. ஆனால், தூர் வாரியதாக அரசு கூறுகிறது. அப்படி தூர் வாரியிருந்தால் கடைமடை வரை தண்ணீர் சென்றிருக்கும். ஆனால்,  தண்ணீர் செல்லவில்லை. எனவே, தூர் வாரும் பணியில் முறைகேடு நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.  தமிழன் எழுச்சிபெற்றால் என்ன நடக்கும் என்பதை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், ஊழல் நிறைந்த எடப்பாடி அரசையும் அகற்ற வேண்டும்” என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க