வழக்கு வலை முதல் கரன்ஸி மழை வரை... திருப்பரங்குன்றத்தில் களேபரம் ஆரம்பம்! | Legal problems in Thirupparankundram by-election

வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (19/09/2018)

கடைசி தொடர்பு:15:54 (19/09/2018)

வழக்கு வலை முதல் கரன்ஸி மழை வரை... திருப்பரங்குன்றத்தில் களேபரம் ஆரம்பம்!

இந்தத் தொகுதிகளில் அவசியம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இப்போதே வாக்காளர்களைத் தடபுடலாகக் கவனித்து வருகின்றன என்று சொல்லப்படுகிறது. இதனால், தேர்தல் நடைபெறுமா என்கிற சட்டச்சிக்கல் எழுந்திருக்கிறது, என்கின்றனர் உள்விவரமறிந்தவர்கள். 

வழக்கு வலை முதல் கரன்ஸி மழை வரை...  திருப்பரங்குன்றத்தில் களேபரம் ஆரம்பம்!

தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேலைகளை ஆளுங்கட்சியினர் இப்போதே ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக, வாக்காளர்களைத் தடபுடலாகக் கவனிக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், தேர்தல் நடைபெறுமா என்கிற சட்டச்சிக்கல் எழுந்திருக்கிறது. நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பைப் பொறுத்தே தேர்தல் நடைபெறும் என்கிறார்கள், சட்டவல்லுநர்கள்.

கடந்த 2016-ம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குப் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சீனிவேல் வெற்றிபெற்றார். ஆனால், அதற்கான அங்கீகாரச் சான்றிதழை அவர் வாங்குவதற்குள் எதிர்பாராதவிதமாக இறந்துபோனார். அதன்பிறகு அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போஸும், தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணனும் போட்டியிட்டனர். இறுதியில், ஏ.கே.போஸ் வெற்றிபெற்றார். 

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலமில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அந்த நேரத்தில், "அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.கே.போஸ் அங்கீகரிக்கப்பட்ட கடிதத்தில், ஜெயலலிதா கைரேகையில் சந்தேகம் இருக்கிறது" எனத் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் மாவட்டத் தேர்தல் அதிகாரியான வீரராகவிடம் புகார் அளித்தார். ஆனால், அவர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததால், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மாதம் 2-ம் தேதி மாரடைப்பால் காலமானார், ஏ.கே.போஸ். இதையடுத்து, திருப்பரங்குன்றம், திருவாரூர் (மு.கருணாநிதி மறைவையொட்டி) ஆகிய இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளன. ஆகவே, இந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ஆதலால், இந்தத் தொகுதிகளில் அவசியம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இப்போதே வாக்காளர்களைத் தடபுடலாகக் கவனித்து வருகின்றன என்று சொல்லப்படுகிறது. இதனால், தேர்தல் நடைபெறுமா என்கிற சட்டச்சிக்கல் எழுந்திருக்கிறது, என்கின்றனர் உள்விவரமறிந்தவர்கள். 

ஏ.கே.போஸ், திருப்பரங்குன்றம்

இதுகுறித்து தி.மு.க. மருத்துவ அணியின் மாநில துணைச் செயலாளர் டாக்டர் சரவணன், ``எம்.எல்.ஏ போஸ் இறந்ததால் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாகச் சொல்லமுடியாது. இந்த வழக்கு தேர்தல் கமிஷன்மீது போடப்பட்டது. எனவேதான், சென்னை உயர் நீதிமன்றம், `14 நாள்களுக்குள் போஸ் சார்பாகக் கைரேகை வழக்கை சேலஞ்ச் பண்ணி... அந்த வழக்கை யார் வேண்டுமானாலும் தொடரலாம்' என்று கால அவகாசம் கொடுத்திருக்கிறது. அந்த அவகாசம் நேற்றுடன் (18.09.2018) முடிவடைகிறது. இதற்கிடையே, என்னுடைய வழக்கறிஞர் அந்த வழக்கு குறித்து தீர்ப்பு வரும்வரை திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடைபெறக் கூடாது என்று கூடுதல் மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். மேலும், இந்தத் தேர்தல் நடைபெறுவதில் சட்டச் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு வரும் முன்பே தொகுதி முழுவதும் பணமழை பொழிய ஆரம்பித்துவிட்டது" என்றார், மிகத் தெளிவாக.

டாக்டர் சரவணன்

சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன், ``மக்கள் பிரதிநிதி சட்டம் 1950-ன்படி ஒரு தேர்தலை அல்லது மனுவை ரத்துசெய்யவோ, வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்யவோ, அடுத்துள்ள வேட்பாளரை எம்.எல்.ஏ-வாக அறிவிக்கவோ உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. இந்த வழக்கில் போஸ் இறந்துபோனதால், வழக்கு தள்ளுபடியாகாது. `டாக்டர் சரவணன் என்னை எம்.எல்.ஏ-வாக அறிவிக்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆக, இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை ஒரு பார்ட்டியாகச் சேர்த்திருப்பதால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுவது சாத்தியமாகாது என்று கருதுகிறேன். ஒருவேளை, `சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தொடர்வார்' என்று நீதிமன்றம் அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி அறிவித்தால், இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது" என்றார்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தொகுதிகளில் பண மழையா? என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close