வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (20/09/2018)

கடைசி தொடர்பு:17:49 (20/09/2018)

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் மகன்மீது பெண் கடத்தல் புகார்!

`அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரத்தீஷ், எனது மனைவியைக் கடத்திவைத்துள்ளார். அவரிடமிருந்து என் மனைவியை மீட்டுத் தாருங்கள்’ என்று கூறி, சென்னையைச் சேர்ந்த இளைஞர் தஞ்சாவூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்துவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரத்தீஷ்சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விஜயராஜேஷ் குமார் என்பவர், ஐ.டி கம்பெனியில் பணி புரிந்து வந்திருக்கிறார். பின்னர், அவர் வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். இவரது மனைவி யாழினி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜயராஜேஷ் குமார் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். 

அதில், ``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெயபால்.  அவரது மகன் ரத்தீஷ் என்பவர், என் மனைவியை கடத்திக்கொண்டு வந்து தஞ்சாவூரில் வைத்துள்ளார். அவரிடமிருந்து என் மனைவியை மீட்டுத் தாருங்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

போலீஸ் வட்டாரத்தில் பேசினோம், விஜயராஜேஷ் குமார் மனைவி யாழினி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் மகனும் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இருவரும் ஒரே வகுப்பில் படித்ததால் நண்பர்களாகப் பழகத் தொடங்கினர். நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையில், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த 11-ம் தேதியில் இருந்து யாழினியைக் காணவில்லை. தனது இரண்டு குழந்தைகளையும் கணவரிடையே விட்டுவிட்டுச் சென்று விட்டார் யாழினி. அவரை விஜயராஜேஷ் குமார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஜெயபாலின் மகன் ரத்தீஷ், யாழினியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

யாழினியின் சொந்த ஊரான தஞ்சாவூர் அண்ணா நகர் பகுதியிலேயே அவரை வைத்துள்ளதாக விஜயராஜேஷ் குமாருக்குத் தெரியவந்ததையடுத்து, இங்கு வந்து புகார் செய்துள்ளார். இதில், `ரத்திஷ் மற்றும் அவரது நண்பர் சுனில் ஆகியோர் தனது மனைவியை கடத்திக்கொண்டு வந்துவிட்டதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும்’ விஜயராஜேஷ் குமார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என போலீஸார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் மகன் மீது போலீஸார் கடத்தல் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீங்க எப்படி பீல் பண்றீங்க