வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (20/09/2018)

கடைசி தொடர்பு:17:44 (20/09/2018)

'மதுரையிலேயே இவ்வளவு கூட்டம்தானா?!'  - ஸ்டாலினைக் கடுப்பேற்றிய கண்டன ஆர்ப்பாட்டம் 

அ.தி.மு.க அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 'ஆர்ப்பாட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என விரிவான அறிக்கையைத் தயாரித்து வருகிறது அறிவாலயம். அறிக்கையில் உள்ள தகவல்களால், மிகுந்த அப்செட்டில் இருக்கிறார் ஸ்டாலின்' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

சேலம் ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின்

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் ஸ்டாலின். அ.தி.மு.க அரசில் நடந்து வரும் தொடர் ஊழல்களைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது தி.மு.க. இதில், சேலம் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, ஸ்டாலின் பங்கேற்கும் முதல் போராட்டக் களம் இது. எனவே, ' மாநிலம் முழுவதும் அ.தி.மு.க அரசுக்கு எதிராக திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்' என அறிவாலத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட செயலாளர்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். இருப்பினும், சில மாவட்டங்களில் கூடிய கூட்டத்தால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் ஸ்டாலின். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், "சேலத்தில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். இதனால், அங்கு மாவட்ட பொறுப்பாளர்களாக இருக்கும் வீரபாண்டி ராஜா, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், சிவலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய வைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கினர். இதனால் உற்சாகமாக மேடையில் பேசினார் ஸ்டாலின். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மற்ற மாவட்டங்களில் என்ன நிலை என்பது குறித்தும் அறிக்கை தயாரிக்கச் சொன்னார் ஸ்டாலின். இதையடுத்து, அறிவாலய நிர்வாகிகள் இதற்கான பணிகளில் இறங்கினர். இதில் அதிர்ச்சிகரமான விஷயங்களே கிடைத்தன.

பல மாவட்டங்களில் சொற்பமான எண்ணிக்கையிலேயே தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, மதுரையில் ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொண்டது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இத்தனைக்கும் மதுரை தெற்கு, வடக்கு, மத்தி என மூன்று மாவட்டப் பொறுப்பாளர்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். 'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், இத்தனை தொண்டர்கள்தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்களா?' எனக் கட்சி நிர்வாகிகள் கவலைப்பட்டனர். திருச்சியில் இரண்டாயிரம் பேர் கூடியது, சற்று ஆறுதல் அளித்துள்ளது" என்றவர், 

"அறிவாலயத்தில் தொண்டர்களுடன் ஆய்வு நடத்திய பிறகு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைத்தார் ஸ்டாலின். இன்னும் சில மாற்றங்களைச் செய்ய இருக்கிறார். அதற்கு முன்னோட்டம் போடும் வகையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அமைந்துவிட்டது" என்றார் விரிவாக.