வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (21/09/2018)

கடைசி தொடர்பு:12:19 (21/09/2018)

`தலைமறைவாக இல்ல; வீட்டில்தான் இருக்கேன்!'- கருணாஸ்

முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாகப் பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகர் கருணாஸ், ``தான் தலைமறைவாக இல்லை. வீட்டில்தான் இருக்கிறேன்" என்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருணாஸ்

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, கருணாஸ் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ``தான் தலைமறைவாக இல்லை. வீட்டில்தான் இருக்கிறேன்" என்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கருணாஸ். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.  

அவர் பேசுகையில், ``நான் இங்கு 2009-ல் அலுவலகம் தொடங்கினேன். இப்போது 2018-ம் வருடம் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதுதான் என் முன்னால் இவ்வளவு பத்திரிகையாளர்கள் வந்து நிற்கிறீர்கள். அன்று நான் பேசியது 45 நிமிடங்கள். ஆனால், அதை முழுமையாக வெளியிடாமல் நான் தவறாகப் பேசியதாக மட்டும் வெளியிட்டுள்ளனர். நான் இதுவரை யாரையும் ஒருமையில்கூட பேசியதில்லை. ஆனால், அன்று என்னுள்ளிருந்த ஆதங்கம் என்னையும் மீறி ஒருமையில் பேசவைத்துவிட்டது. அதற்காக நான் வருந்தினேன். ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எனக்கே இப்படி ஒரு நிலை என்றால் பொதுமக்கள் பெரிதும் பாவம். ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவற்றை அனைத்து அதிகாரிகளும் ஏன் ஊக்குவிக்கிறார்கள். அதிகாரி தவறு செய்தார் என்றுதான் நான் கூறினேன். என் மொத்த வீடியோவையும் பார்த்தால் உங்களுக்குப் புரியும். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துள்ளேன். இவ்வாறு நான் பேசியதில் என்ன தவறு. நான் உண்மையைத்தானே பேசினேன். கூவத்தூரில் நான் இருந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தனியாக தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடன் உள்ளவர்கள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்கின்றனர். அதைக் கண்டித்தே நான் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினேன். காவலர்களில் இந்தச் செயலைக் கண்டிக்க வேண்டும் என்றுதான் கூறினேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. நீங்கள் முழுமையான வீடியோவை பார்த்துவிட்டு பின்னர் பேசுங்கள். 

என் மனைவி, பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் என்னால் பார்த்துக்கொண்டு எப்படி அமைதியாக இருக்கமுடியும். நான் ஞாயிற்றுக்கிழமை பேசியது புதன் கிழமை வைரலானதுக்கு காரணம் என்ன.  நான் பேசியது திரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. நான் அனைத்துச் சமுதாயத்தையும் நேசிக்கக்கூடியவன். யார் மீதும் கோபம் இல்லை. ஒருவேளை நான் பேசியது யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் என் மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உளவுத்துறை அதிகாரி ஒருவர் முதல்வரிடம் என்னைப் பற்றி ஒரு பொய்யான தகவல் சொன்னார் என மட்டும்தான் கூறினேன். நான் எதற்கும் பயந்து ஓடிப்போகிறவன் கிடையாது. எதையும் சந்திக்கத் தயார். கடவுளே செய்தாலும் தவறு தவறுதான்” எனக் கூறினார். கூவத்தூரில் நீங்கள் இருந்தது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரே என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, “ அவர் பெரிய அரிச்சந்திரன். அது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் சொல்கிறேன்” எனக் கூறி புறப்பட்டார்.