வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (21/09/2018)

கடைசி தொடர்பு:16:27 (21/09/2018)

`இனி இந்த அறை டி.ஆர்.பாலுவுக்குத்தான்!' - பழனிவேல் தியாகராஜனைப் பதற வைத்த அறிவாலயம்

பழனிவேல் தியாகராஜன்

கவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளருக்குத் தகவல் சொல்லாமல் அவரது அறையைக் காலி செய்துவிட்டனர் அறிவாலய நிர்வாகிகள். "பத்து லட்ச ரூபாய் செலவில் அந்த அறையைப் புதுப்பித்து வைத்திருந்தார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அந்த அறையை வலுக்கட்டாயமாக டி.ஆர்.பாலுவுக்கு ஒதுக்கிவிட்டனர்" என்கின்றனர் தி.மு.க-வினர். 

சென்னை, அண்ணா அறிவாலயத்தின் தரைத்தளத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் பழனிவேல் தியாகராஜனுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆறு மாதங்களாக இந்த அறையில் அமர்ந்து கொண்டுதான் கட்சிப் பணிகளை அவர் கவனித்து வந்தார். இந்த அறையில் நவீன வசதிகளோடு வடிவமைத்திருந்தார் தியாகராஜன். இந்நிலையில், நேற்று அவரிடம் இருந்த அறையை வலுக்கட்டாயமாகப் பெற்று, டி.ஆர்.பாலுவுக்கு ஒதுக்கிவிட்டனர். இதைப் பழனிவேல் தியாகராஜன் எதிர்பார்க்கவில்லை.  

டி.ஆர்.பாலுஅறிவாலய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "கட்சியின் மாநிலச் செயலாளர்கள் யாருக்கும் அறிவாலயத்தில் தனி அறைகள் ஒதுக்கப்படுவதில்லை. கட்சியின் வளர்ச்சிக்காகத் தகவல் தொழில்நுட்ப அணி என்ற ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டதும், பழனிவேல் தியாகராஜனை மாநிலச் செயலாளராக நியமித்தார் ஸ்டாலின். இதன் பிறகு, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் விவாதிப்பது, மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்வது எனச் சுறுசுறுப்புடன் வலம் வந்துகொண்டிருந்தார். பொதுவாக, அறிவாலயத்தில் உள்ள நிர்வாகிகள் சிலருக்குத் தியாகராஜனைப் பிடிக்கவில்லை. அவரும் அவர்களுடன் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அலுவலகத்துக்குள் வந்தாலும் யாருடனும் பேச மாட்டார். அமைப்புச் செயலாளர் உட்பட ஐந்து பேர் அவருக்குப் பிரதான எதிரிகளாக இருக்கின்றனர். ஆனால், தியாகராஜனுக்கு ஆதரவாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருப்பதால்தான் அறிவாலய நிர்வாகிகளை ஒதுக்கியே வைத்திருந்தார். அவரது அறைக்குள்ளும் யாரும் நுழைய முடியாது. இதை அறிவாலய நிர்வாகிகள் ரசிக்கவில்லை. அவரிடமிருந்து அறையைப் பிடுங்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

துரைமுருகனிடம் இருந்த முதன்மை நிலைய செயலாளர் பதவி டி.ஆர்.பாலுவுக்கு ஒதுக்கப்பட்டதை, தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டனர். நேற்று பழனிவேல் தியாகராஜன் அறிவாலயத்துக்குள் நுழைவதற்கு முன்னரே, அந்த அறையின் சாவியைப் பூட்டி வைத்துக் கொண்டனர். வெளியில் மாட்டப்பட்டிருந்த போர்டைக் கழட்டிவிட்டு, டி.ஆர்.பாலு பெயர் கொண்ட பலகையை மாட்டிவிட்டனர். இதை பழனிவேல் தியாகராஜன் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து நிர்வாகிகளிடம் அவர் கேட்டபோது, 'எல்லாம் தளபதியின் உத்தரவு' என ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டனர்கள். அவரும் கோபத்தில், 'இனி நான் இங்கு வர மாட்டேன். வெளியிலேயே அறையைப் பார்த்துக் கொள்கிறேன்' எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார். அந்த அறைக்குள் ராஜமரியாதையோடு அமர்ந்திருந்தார் தியாகராஜன். ஒரே நிமிடத்தில் அவரது அறையைக் காலி செய்துவிட்டார்கள்" என்றார் விரிவாக.