வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (22/09/2018)

கடைசி தொடர்பு:16:17 (22/09/2018)

`400 பேர் அல்ல; 40 பேர் வந்தாலும் திருவாரூர் கூட்டத்துக்கு வருவேன்'- அழகிரி அதிரடி

திருவாரூரில் நாளை தன் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். ``40 பேர் வந்தாலும் சரி; 400 பேர் வந்தாலும் சரி, நான் கூட்டத்தில் கலந்துகொள்வேன். வருபவர்கள் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்' எனக் கூற அதற்கான ஏற்பாடுகளை அவரின் ஆதரவாளர்கள் பரபரப்புடன் செய்து வருகின்றனர். 

அழகிரி

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு அவரின் மகன் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மதுரையில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அழகிரி பின்பு பிரமாண்ட கூட்டத்தை திரட்டி சென்னையில் கருணாநிதி சமாதிக்குச் செல்லும் பேரணி ஒன்றை நடத்தினார். அதன் பிறகு அமைதி காத்த அழகிரி நாளை திருவாரூரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். கருணாநிதியின் சொந்த ஊர் அவர் எம்.எல்.ஏ-வாக இருந்த ஊர் என்பதால் அழகிரி திருவாரூரில் நடத்தும் கூட்டத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். ``அண்ணன் திருவாரூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு வருவேன் என சொன்னதுமே நாங்க அதற்கான ஏற்பாட்டை செஞ்சோம். அப்போதே அண்ணன் சொல்லிவிட்டார். யாரையும் காசு கொடுத்து அழைக்கக்கூடாது. தகவல் மட்டும் சொன்னால் போதும். நமக்கு என வருபவர்கள் வரட்டும் 40 பேர் வந்தாலும் சரி; 400 பேர் வந்தாலும் சரி, நான் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வேன்'' என்றார்.

அதன்படி நாளை நடக்கும் கூட்டத்துக்கு வரும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளோம். மேலும், பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பின்னர் காரில் நின்றபடியே பேரணியாக தெற்கு வீதியில் உள்ள கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்துக்கு வருகிறார். மண்டபத்தில் கருணாநிதியின் படத்துக்கு புகழஞ்சலி செலுத்திவிட்டு ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். நாங்கள் தலைவர் கருணாநிதி சொல்வதுபோல் நான் என்றால் உதடுகள் ஒட்டாது. நாம் என்றால்தான் ஒட்டும் என்கிற வழியில் செயல்படுகிறோம். ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை வராது. ஸ்டாலின் உடன் அண்ணன் அழகிரியும் இணைய வேண்டும். அப்போதுதான் ஓசை வரும் இதைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே செயல்படுகிறோம்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க