Published:Updated:

நவம்பரில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார்! - ஏ.சி.சண்முகம் தகவல்

மலையரசு
நவம்பரில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார்! - ஏ.சி.சண்முகம் தகவல்
நவம்பரில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார்! - ஏ.சி.சண்முகம் தகவல்

`ரஜினிகாந்த் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் கட்சி தொடங்குவார்'' என புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.O படத்தின் பணிகளை முடித்துக்கொடுத்துவிட்டு தற்போது `பேட்ட' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். டார்ஜிலிங், லக்னோ, காசி என இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் `பேட்ட' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாஸுதீன் சித்திக் என முற்றிலும் புதுவிதமான காம்போவுடன் ரஜினி களமிறங்கியுள்ளதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. ``பிஸியான படப்பிடிப்புக்கு மத்தியிலும், தனது மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை ரஜினிகாந்த் தீவிரப்படுத்தியுள்ளார். மன்றத்தின் ஒவ்வொரு செயல்பாடும் ரஜினியின் கண்ணசைவுக்குப் பின்னரே முடிவு செய்யப்படுகிறது. படப்பிடிப்பில் தீவிரமாகக் கலந்துகொண்டாலும், ஷூட்டிங் முடிந்தவுடன் லேப்-டாப் முன்பு அமர்ந்துவிடுகிறார்" என்று கூறி வருகின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.

இந்நிலையில், ``இன்னும் ஓரிரு மாதங்களில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிடுவார் எனப் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி.சண்முகம், ``படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே ரஜினியை சந்தித்தேன். அப்போதே மக்கள் மன்றத்தின் பணிகளை முடுக்கிவிட்டுத்தான் சென்றார். அடுத்த மாதம் மக்கள் மன்றத்தின் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ரஜினி கட்சியை அறிவித்து தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவார். அவர் கட்சி ஆரம்பித்த பிறகு அவருடன் கூட்டணி வைத்துச் செயல்படுவோம்" எனக் கூறினார்.