Published:Updated:

`சிறையில் என்னைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்' - திருமுருகன் காந்தி வேதனை!

கா.முரளி
`சிறையில் என்னைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்' - திருமுருகன் காந்தி வேதனை!
`சிறையில் என்னைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்' - திருமுருகன் காந்தி வேதனை!

சிறையில் என்னைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர் எனத் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் கைதாகி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் உள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார் அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்தனர். திருமுருகன் காந்திக்கு வயிற்று வலி, வாயு பிரச்னை, மூச்சுத் திணறல், அல்சர் போன்ற காரணங்கள் ஏற்கெனவே இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதன் பிரச்னையால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்தே இன்று அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 3 மணி நேரம் பரிசோதனை செய்தனர். திருமுருகன் காந்தியை பரிசோதித்த மருத்துவர்கள், `அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு ரத்த பரிசோதனை, ஸ்கேன், உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது' என்றனர்.

பரிசோதனை முடித்து வெளியே வந்த திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம், ``எனக்கு உடல் நிலை சரியில்லாமல் உள்ளது. ஆனால், சிறைத்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. சனிக்கிழமையில் இருந்து எனக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. சிறையில் நான் யாரிடமும் பேசக்கூடாது என்கிற நோக்கில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்" என்றார். இந்த உடல் பரிசோதனைக்காகத் திருமுருகன் காந்தியை வேலூர் மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் பலத்த பாதுகாப்போடு சிறைக்கு அழைத்துச் சென்றனர்.