Published:Updated:

``ரஃபேல் விவகாரத்தில் மவுனியாக இருக்கிறார் மோடி” - திருப்பூரில் முத்தரசன் தாக்கு

தி.ஜெயப்பிரகாஷ்
``ரஃபேல் விவகாரத்தில் மவுனியாக இருக்கிறார் மோடி” - திருப்பூரில் முத்தரசன் தாக்கு
``ரஃபேல் விவகாரத்தில் மவுனியாக இருக்கிறார் மோடி” - திருப்பூரில் முத்தரசன் தாக்கு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பிரதமர் மோடி தானும் ஊழல் செய்யமாட்டேன். தன்னோடு இருப்பவர்களும் ஊழல் செய்யமாட்டார்கள் என்கிறார். ஆனால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமரே தெரிவித்திருக்கிறார். இன்றைக்கு நாடு முழுவதும் ரஃபேல் ஊழல் குறித்து விவாதிக்கப்படும் சூழலில், இங்குள்ள பிரதமர் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு மவுனியாக இருப்பதன் மூலம் ஊழல் நடைபெற்றிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அதேபோன்று தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. குறிப்பாக மாநில அரசாங்கத்தில் பணியாற்றும் உயரதிகாரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் ஆளும் அ.தி.மு.க அரசானது மக்களிடம் தனக்கிருந்த ஒட்டுமொத்த செல்வாக்கையும் மொத்தமாக இழந்துவிட்டிருக்கிறது. தேர்தல் வந்தால் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், தேர்தலில் வெற்றிபெறுவோம் எனத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியொரு நம்பிக்கை இருந்தால், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியதுதானே.

உரிமைக்காகப் போராடிய திருமுருகன் காந்தி, ஷோபியா, வளர்மதி மற்றும் கவுதமன் உள்ளிட்டோரை ஆளும் தமிழக அரசு உடனடியாக கைது செய்கிறது. அதேசமயம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவாக முகநூலில் பதிவிட்ட எஸ்.வி.சேகரையும், நீதிமன்றத்தைத் தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜாவையும் கைது செய்யத் தயங்குகிறது.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் 7 தமிழர்களின் விடுதலையை மத்திய அரசு அரசியலாக்கிவிடக்கூடாது. ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி என்பதால், ஆளுநர் மூலம் பழிவாங்கும் போக்கில் மத்திய அரசு செயல்படக்கூடாது” என்றார்.