Published:Updated:

``சங்கத்திலிருந்தும் கருணாஸை நீக்குங்கள்” - வலுக்கும் எதிர்ப்பு

மலையரசு
``சங்கத்திலிருந்தும் கருணாஸை நீக்குங்கள்” - வலுக்கும் எதிர்ப்பு
``சங்கத்திலிருந்தும் கருணாஸை நீக்குங்கள்” - வலுக்கும் எதிர்ப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து கருணாஸ் நீக்கப்பட வேண்டும் என நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 16-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை அதிகாரியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார் நடிகர் கருணாஸ். அக்கூட்டத்தில் பேசும்போது தமிழக முதல்வர் பழனிசாமி குறித்தும், தமிழக காவல்துறை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. தொடர்ந்து இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே மன்னிப்புக் கோரினார் கருணாஸ். அதேவேளையில் அவர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை நேற்று அவரை கைதும் செய்தது.

தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு சிலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் இன்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் மற்றும் தலைவர் நாசரைச் சந்தித்து கருணாஸ் பேச்சு குறித்து சில கோரிக்கைகளை விடுத்தார். அதில், ``தமிழ் மக்களின் வாழ்வில் பின்னி பிணைந்து உள்ள தமிழ் சினிமாவின் முக்கியமான சங்கமான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ பொறுப்பில் உள்ள கருணாஸ், ஆட்சியை நாங்கள்தான் பிச்சையாகப் போட்டோம் என்றும், காவல் அதிகாரிகளுக்குச் சவால் விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

சாதிய காழ்ப்புணர்ச்சியுடன் பொது இடத்தில் கருத்து என்ற பெயரில் விஷத்தைக் கக்கியிருக்கிறார். அவரின் பேச்சால் ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பல்வேறு சாதிய அமைப்புகளிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவரின் பேச்சை தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கண்டித்துள்ளனர். அதேநேரம் அவரைக் காவல்துறை கைதும் செய்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக மக்கள் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர். ஆனால், அவர் மீது இன்னும் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்புமிக்க பதவியில் இருந்துகொண்டு கூலிப்படை தலைவர்போல் பேசிய கருணாஸை உடனடியாக நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.