வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (25/09/2018)

கடைசி தொடர்பு:18:30 (25/09/2018)

`இது வெறும் டிரெய்லர்தான் கண்ணா!’ - ரஃபேல் விவகாரத்தில் ராகுல்காந்தி காட்டம்

ரஃபேல் விமானம் விவகாரம் தொடர்பாக வரும் மாதங்களில் இன்னும் பல உண்மைகளை வெளியிடுவோம் என ராகுல்காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். 

ராகுல்காந்தி

ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பாக பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நிலவி வருகிறது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலைன்ஸ் நிறுவத்தை மட்டும் மத்திய அரசு சிபாரிசு செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹொல்லாண்டே தெரிவித்தது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன் சொந்த தொகுதியான அமேதியில் உள்ள காங்கிரஸ் சமூகவலைதள நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பா.ஜ.க மற்றும் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசும்போது, ``ஊழலை ஒழிக்கத்தான் மோடி ஆட்சிக்கு வந்தார் என அனைவரும் கூறுகின்றனர். ஆனால், அவர்தான் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரஃபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார். வேடிக்கை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இனிமேல்தான் சுவாரஸ்யமே காத்திருக்கிறது. அடுத்த 2-3 மாதங்களில் உங்களுக்கு நகைச்சுவை காத்திருக்கிறது. மோடியின் செயல், ரஃபேல் ஊழல், விஜய் மல்லையா, லலித் மோடி, பணமதிப்பிழப்பு ஆகிய அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக வெளியிடப்படும். மோடி பாதுகாவலர் அல்ல திருடன்” என மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.