வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (26/09/2018)

கடைசி தொடர்பு:15:18 (26/09/2018)

`அதிருப்தி அணிகளை சமாதானப்படுத்துங்கள்!' - டி.ஆர்.பாலுவுக்கு ஸ்டாலின் மெசேஜ்

`கொஞ்சநாள் போகட்டும். விரைவில் உங்களுக்கு நல்லபடியாகச் செய்துகொடுக்கிறோம்' எனத் தங்கவேலன் தரப்புக்கு உறுதியளித்திருக்கிறார் டி.ஆர்.பாலு

`அதிருப்தி அணிகளை சமாதானப்படுத்துங்கள்!' - டி.ஆர்.பாலுவுக்கு ஸ்டாலின் மெசேஜ்

தென்மண்டலத்தில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை சமசரம் செய்து வரும் பணியில் இறங்கியிருக்கிறது அறிவாலயம். `ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவிவரும் அதிருப்தியை சரிசெய்ய டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி தலைமையில் குழு அமைத்திருக்கிறார் ஸ்டாலின். கடந்த சில நாள்களாக இந்தக் குழு தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை வரவழைத்திருந்தார் டி.ஆர்.பாலு. மாவட்டத்திலிருந்து 20 ஒன்றியச் செயலாளர்கள் உட்பட நகர, கிளைக் கழக நிர்வாகிகள் குவிந்துவிட்டனர். காலையில் 10 மணிக்குத் தொடங்கிய ஆய்வுக் கூட்டம், மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது. ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், ``மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தி.மு.க நிர்வாகிகளை மாற்றியமைத்து, கடந்த ஜூலை மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் பொதுச் செயலாளர் அன்பழகன். அந்த அறிவிப்பில், 'தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எம்.ஜெயக்குமார், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கம்பம் ராமகிருஷ்ணன் தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் சுப.த.திவாகரன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கே.முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இதேபோல், மதுரை மாநகர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்திய, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களில் சில ஒன்றியக் கழகச் செயலாளர்களும் மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதிலாகப் புதிதாக ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

அன்பழகன்அறிவாலயத்தின் இந்தச் செயலை மாவட்ட நிர்வாகிகள் சிலர் ரசிக்கவில்லை. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 17 ஒன்றியச் செயலாளர்களும் அறிவாலயத்தில் குவிந்தனர். 'ஸ்டாலினைப் பார்க்காமல் நகர மாட்டோம்' என அவர்கள் உறுதியாக இருந்தனர். அவர்களது குறைகளைக் கேட்டறிந்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 'இப்போது அவரைச் சந்திக்க முடியாது. புகாரை மனுவாக எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்' எனக் கூறிவிட்டார். இதன் பின்னர், மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளர் நடத்தும் கூட்டங்களையும் நிர்வாகிகள் புறக்கணித்தனர். அழகிரி பேரணி நடத்தியபோது, அதிருப்தியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள் என்பதையும் தலைமை கவனித்து வந்தது. தென்மாவட்டத்திலிருந்து எந்தவொரு நிர்வாகியும் அழகிரியின் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதைப் பெரிதும் ரசித்த ஸ்டாலின், 'மாவட்டங்களில் உள்ள அதிருப்தியை சரிசெய்யுங்கள்' என டி.ஆர்.பாலுவுக்கும் ஆர்.எஸ்.பாரதிக்கும் உத்தரவிட்டார். அவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாள்களாக அறிவாலயத்தில் தங்கியிருந்து, சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார் விரிவாக. 

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவர், "புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முத்துராமலிங்கத்தின் செயல்பாடுகள் பற்றித்தான் டி.ஆர்.பாலுவிடம் தெரிவித்தோம். அவரிடம் பேசும்போது, 'தலைமை சொல்வதைக் கேட்டுத்தான் கட்சிப் பணியாற்றி வருகிறோம். பூத் கமிட்டி பணிகள், உறுப்பினர் சேர்க்கை எனக் கட்சி தொடர்பான அனைத்து வேலைகளையும் திறம்பட செய்து வருகிறோம். ஆனால், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் எங்களது பெயர்களைப் புறக்கணிக்கிறார் முத்துராமலிங்கம். மாவட்டத்தில் நடந்த இலக்கிய அணிக் கூட்டத்தில்கூட, செயலாளர் பெயரையே அவர் போடவில்லை. இப்படியிருந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது?' என ஆதங்கப்பட்டுள்ளனர். இதனால் கொதிப்படைந்த டி.ஆர்.பாலு, மாவட்டச் செயலாளரை அழைத்து, 'அனைவரையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சிறு பிள்ளையாக நடந்துகொள்ளக் கூடாது. மாவட்டச் செயலாளரின் வேலையே கட்சிக்காரர்களை வழிநடத்துவதுதான். இனி எந்தப் புகாரும் வரக் கூடாது' என எச்சரித்தார். இதன் பின்னர், அதிருப்தி அணியினரிடம் பேசிய டி.ஆர்.பாலு, 'கொஞ்ச நாள் போகட்டும். விரைவில் உங்களுக்கு நல்லபடியாகச் செய்து கொடுக்கிறோம்' எனத் தங்கவேலன் தரப்புக்கு உறுதியளித்திருக்கிறார்" என்றார் நிதானமாக.