Published:Updated:

என்ன கொடுமை இது: கருணாநிதி வேதனை

என்ன கொடுமை இது: கருணாநிதி வேதனை
என்ன கொடுமை இது: கருணாநிதி வேதனை
என்ன கொடுமை இது: கருணாநிதி வேதனை

சென்னை: தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மீது ஆறு மாத காலத்திற்கு சஸ்பெண்ட் நடவடிக்கை, திருத்தணி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பது என்ன கொடுமை இது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் பிரதான எதிர்க்கட்சியாக தே.மு.தி.க.தான் அமைந்தது. தே.மு.தி.க.விற்கும், தி.மு.க.வுக்கும் தோழமை கிடையாதுதான். ஆனாலும் அ.தி.மு.க. அரசு தே.மு.தி.க. என்ற எதிர்க்கட்சியின் மீது எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் 8.2.2013 அன்று நடைபெற்றபோது, தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்று, வெளியேறியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் (தமிழழகன்) பேரவையில் பேசும்போது, தான் கட்சியிலிருந்து வெளியேறிய காரணத்தால், ஆட்சியினர் தன் தொகுதிக்கு நன்மைகளைச் செய்கிறார்கள் என்றும், மற்ற தே.மு.தி.க. உறுப்பினர்களும் தன்னைப் போல் முடிவு எடுத்தால், அவர்களும் பயன்பெறலாம் என்றும் வெளிப்படையாகப் பேரவையிலே சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிடும் அளவுக்கு அழைப்பு விடுத்தது முறையா?

அவரது அந்தப் பேச்சுக்கு தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு சாராருக்கும் இடையே தகராறு அப்போது ஏற்பட்டது. தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற விவகாரம் இது. இதில் தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்று அக்கட்சியின் கட்டுப்பாட்டுக்குப் புறம்பாகச் செயல்படும் உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி, தே.மு.தி.க.விலே தொடர்ந்து உறுதியாக இருக்கின்ற ஆறு பேர் மீது பிரச்னை எழுப்பப்பட்டு, ஆறு மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

##~~##
தே.மு.தி.க.வைச் சேர்ந்த திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. மீது ஏதோ ஒரு புகாரைக் கூறி கடந்த ஆண்டு அவரைக் கைது செய்தார்கள். அவர் மறுநாளே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். உடனே ஐகோர்ட்டில் அப்பீல் செய்து ஜாமீனை ரத்து செய்து, கடந்த மூன்று நாட்களாக அவரைக் கைது செய்ய நான்கு தனிப்படைகளாம். என்ன கொடுமை இது?
1989ஆம் ஆண்டு தி.மு.க. 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொறுப்புக்கு வந்தபோது, முதன்முதலாக நான் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கிய நேரத்தில், என் கையிலிருந்து நிதி நிலை அறிக்கையைப் பிடுங்கிக் கிழித்தெறிந்து என்னையும் தாக்குவதற்கு அ.தி.மு.க.வினர் முற்பட்டபோது, அவர்கள் ஒரு சில நாட்களுக்கு அவை நடவடிக்கையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
"ஒரு உணர்ச்சியின் காரணமாக, கொந்தளிப்பின் எதிரொலியாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரும், மற்றவர்களும் அவையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று நான் குறிப்பிட்டேன்.
அரசியலிலே, அடிப்படையில் ஒரு கண்ணியமும், பண்பாடும் நாகரிகமும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கருத்துக்களை நான் தெரிவிப்பதற்கே உள்நோக்கம் கற்பித்து; ஒருசிலர் விமர்சிக்கக்கூடும்.
ஜனநாயகத்தில் அரசியலை அரசியலாகச் சந்திக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற நாகரிகமற்ற செயல்பாடுகளின் மூலமாகச் சந்தித்துச் சாதிக்கலாம் என்று நினைப்பது சரியல்ல என்பதே என் கருத்து. ஜனநாயக மாண்புகளில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஓங்கிக் குரல் கொடுத்திட வாரீர் என்று அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.