Published:Updated:

`அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது!’ - நல்லகண்ணு கண்டனம்

`அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது!’ - நல்லகண்ணு கண்டனம்
`அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது!’ - நல்லகண்ணு கண்டனம்

``அ.தி.மு.க அரசைப் பற்றி தரக்குறைவாகப் பேசினால் நாக்கை அறுத்துவிடுவேன்” என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமானது. வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது என்பதுதான் தூத்துக்குடி மக்களின் விருப்பம். கடந்த 2 நாள்களுக்கு முன்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழுவினரிடம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 2,000-க்கும் அதிகமான மனு பெறப்பட்டுள்ளதாக ஆய்வுக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்துள்ளார். ஆனால், ஆய்வின் மூன்றாம் நாள் சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தின் மண்டல அலுவலகத்தில் ஆலைத்தரப்பினர் சென்று, ஆலையைத் திறக்க வேண்டும் என 45,000 பேர் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதுபோல, ஆலையைத் திறக்க ஆதரவுக்கும் பணம் கொடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றியுள்ளது ஆலை நிர்வாகம். இது சட்டவிரோதமானது. இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், இதற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த போராட்டம்போல மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆலையைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்காமல், தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

அ.தி.மு.க அரசைப் பற்றி தரக்குறைவாகப் பேசினால் நாக்கை அறுத்துவிடுவேன்” என வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தையே ஹெச்.ராஜா தாக்கிப் பேசியதும், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் தரக்குறைவாகப் பேசியதும் பா.ஜ.க, மத்தியில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில்தான். தற்போது மத்திய பா.ஜ.க அரசுடன் அ.தி.மு.க ஒன்றி, இணைந்து இருப்பதால்தான் அமைச்சர் துரைக்கண்ணுவும் அவ்வாறு தைரியமாகப் பேசியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு ஜனநாயகத்துக்கு விரோதமானது, வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதேநிலை நீடித்தால், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயரும் அபாயம் ஏற்படும். இதன் விலையைக் குறைத்திடவும் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதிகவிலை, முறைகேடு இல்லாமல் இந்த மணல் விற்பனை செய்யப்பட வேண்டும்.

 இதுபோன்ற மணல் இறக்குமதியால் ஆறுகள் பாதுகாக்கப்படும். விதிமுறைகளை மீறி பல அடி ஆழம் தோண்டப்பட்டு மணலை இரவு, பகலாக அள்ளி விற்பனை செய்ததன் விளைவுதான் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது காவிரிக்கு மட்டுமல்ல. மற்ற அனைத்து ஆறுகளுக்கும்தான். இனியாவது ஆறுகள் பாதுகாக்கப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட வேண்டும்” என்றார்.