Published:Updated:

தெலங்கானா சட்டப்பேரவைக் கலைப்பு எதிரொலி - மாநில அரசுகளுக்குக் கடிவாளம் போடும் தேர்தல் ஆணையம்!

தெலங்கானா சட்டப்பேரவைக் கலைப்பு எதிரொலி - மாநில அரசுகளுக்குக் கடிவாளம் போடும் தேர்தல் ஆணையம்!
தெலங்கானா சட்டப்பேரவைக் கலைப்பு எதிரொலி - மாநில அரசுகளுக்குக் கடிவாளம் போடும் தேர்தல் ஆணையம்!

மாநில சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், கலைக்கப்பட்ட நாளிலிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தெலங்கானா சட்டப்பேரவையின் ஆயுள்காலம் அடுத்த ஆண்டு வரை உள்ள நிலையில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க விரும்பாத அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முன்கூட்டியே தனது அமைச்சரவையைக் கலைத்தார். தொடர்ந்து காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுடன் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோல் மத்திய அரசும் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மாநிலச் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், கலைக்கப்பட்ட நாளிலிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டுவர இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வந்தது. தெலங்கானா சட்டப்பேரவை கலைத்ததைத் தொடர்ந்தே தேர்தல் ஆணையம் இந்தப் பரிசீலனையில் ஈடுபட்டிருந்தது. பொதுவாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுக்குப் பிறகே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டாலும் இதே முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது

ஆனால், அப்படிச் செய்யும்போது ஆளுகின்ற அரசு புதிய திட்டங்களை அறிவித்து மக்களைக் கவர வாய்ப்புள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தடுக்கவே புதிய விதியை அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி இன்று புதிய விதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், ``மாநிலச் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், கலைக்கப்பட்ட நாளிலிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். புதிய சட்டப்பேரவை அமையும் வரை தேர்தல் விதிகள் அமலில் இருக்கும். அதுவரை மாநில அரசு, புதிய திட்டங்களை அமல்படுத்துக் கூடாது. பொறுப்பு அரசாங்கம் சார்பில் எந்தவிதமான கொள்கை சார்ந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. இது மத்திய அரசுக்கும் பொருந்தும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதமாக, தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.