Published:Updated:

சிலைக்கு மாலை போடுவதிலும் கோஷ்டி பூசலை வெளிப்படுத்தும் தி.மு.க.!

சிலைக்கு மாலை போடுவதிலும் கோஷ்டி பூசலை வெளிப்படுத்தும் தி.மு.க.!
சிலைக்கு மாலை போடுவதிலும் கோஷ்டி பூசலை வெளிப்படுத்தும் தி.மு.க.!

புதுக்கோட்டை: அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவதில் கூட கோஷ்டி பூசலை தி.மு.க. விட்டுக்கொடுக்கவில்லை. மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் அமைச்சர் ரகுபதியின் தலைமையில் ஒரு கோஷ்டியும் மாலை மரியாதை செய்திருக்கிறது புதுக்கோட்டையில்.

சிலைக்கு மாலை போடுவதிலும் கோஷ்டி பூசலை வெளிப்படுத்தும் தி.மு.க.!

அ.தி.மு.க.வில் இருந்து ரகுபதி விலகி தி.மு.க.வில் சேர்ந்தது முதல், மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசுவிற்கும், ரகுபதிக்கும் ஏழாம் பொருத்தம் தான். கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரியண்ணன் அரசு புதுக்கோட்டையில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அந்த தோல்விக்கான காரணம் ரகுபதி தான் என பெரியண்ணன் அரசு, ரகுபதியுடன் மோதல் போக்கை தொடங்கினார். அன்றுமுதல் இன்று வரை கலைஞர், ஸ்டாலின், அழகிரி என அத்தனை பேருக்கும் தெரிந்தே கோஷ்டி அரசியல் செய்து வருகிறார்கள் இருவரும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டையில் போட்டியிட இருவருமே தலைமையில் விருப்பம் தெரிவிக்க அந்த வாய்ப்பு ஸ்டாலின் ஆதரவாளரான பெரியண்ணன் அரசுக்கு கிடைத்தது. ரகுபதிக்கு விராலிமலை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பெரியண்ணன் அரசு விராலிமலையில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரான விஜயபாஸ்கருடன் கூட்டு சேர்ந்து ரகுபதியை தோற்கடித்தார் எனும் பேச்சு கிளம்பியது. விராலிமலை தொகுதியில் இருந்த தனது ஆதரவாளர்களிடம் ரகுபதிக்கு எதிராக வேலை செய்யுமாறு பெரியண்ணன் அரசு சொன்னதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. எதிர்பார்த்தது போலவே ரகுபதி தோல்வியடைந்தார்.

சிலைக்கு மாலை போடுவதிலும் கோஷ்டி பூசலை வெளிப்படுத்தும் தி.மு.க.!

அதேபோல் புதுக்கோட்டையில் போட்டியிட்ட பெரியண்ணன் அரசுவை தனது தீவிர விசுவாசியான ஜாபரின் உதவியோடு தோற்கடித்தார் ரகுபதி. தேர்தல் நேரத்து பகை அதோடு முடிவுறாமல், சமீபத்தில் ரகுபதி நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதற்கு பேராசிரியரும் துணைபோனார் எனும் குற்றச்சாட்டும் கிளம்பி அடங்கியது. அதன்பிறகும் புதுக்கோட்டை வந்த ஸ்டாலின் ரகுபதியின் கல்லூரியில் தங்கியிருந்தது பெரியண்ணன் அரசுவிற்கு அதிர்ச்சியளித்தது. வேறு வழியில்லாமல் ரகுபதியின் கல்லூரிக்கு சென்று ஸ்டாலினை பார்த்து வந்தார் அரசு. இருவரிடமும் பேசிய ஸ்டாலின் ஒற்றுமையாக இருந்தால் தான் வெல்ல முடியும் என சூசகமாக சொல்லிவிட்டு போனார். அதுமுதல் கோஷ்டி பூசல் சற்றே ஓய்ந்திருந்தது.

##~~##
இதெல்லாம் ஒருபுறமிருக்க, புதுக்கோட்டையில் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார் அரசு. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் நேரு, ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் திருச்சியில் தி.மு.க தான் போட்டியிடும்’ என திட்டவட்டமாக அறிவித்து விட்டு போனார். அதிலிருந்து மீண்டும் நீயா? நானா? போட்டி துவங்கி இருக்கிறது. சமீபத்தில் திருச்சி வந்த ஸ்டாலினை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட  விளம்பரத்தில் நேருவின் படத்தை போட்டு அசத்தினார் ரகுபதி. அதிலிருந்தே திருச்சி தொகுதியில் அண்ணனுக்கு தான் சீட் என அவரது ஆதரவாளர்கள் செய்தி பரப்ப துவங்கி விட்டனர்.
இந்த நிலையில் தான் அம்பேத்கரின் பிறந்த நாள் வந்தது. நேற்று காலை பத்தரை மணிக்கு பெரியண்ணன் அரசு தலைமையில் ஒரு கோஷ்டி மாலை அணிவித்து விட்டுப்போக, அடுத்த அரைமணி நேரத்தில் ரகுபதி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு போயிருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைக்கப்போகிறது. எப்படியும் அவர்களது ஆதரவு நமக்கு வேண்டும் என்பதால் தான் இருவரும் சிலைக்கு மாலை போட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.
-வீ.மாணிக்கவாசகம்