வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (29/09/2018)

கடைசி தொடர்பு:17:23 (29/09/2018)

அதிருப்தியாளர்களுக்கு பதவி! மு.க.ஸ்டாலின் திட்டம்

ஸ்டாலின்

தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டது. அதே நேரம் துரைமுருகன் வசம் இருந்த முதன்மைச் செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் மத்தியில் இருந்துவந்தது. இந்தப் பதவிக்கு எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் கண்வைத்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு அந்தப் பதவியை வழங்கினார் ஸ்டாலின். ஸ்டாலின் தலைவராக முடிசூடிய பிறகு, கட்சிக்குள் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஏ.வ.வேலு, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்ட சீனியர் லீடர்கள் இதனால் வருத்தத்தில் இருந்து வந்தார்கள். ஆ.ராசா சில நாள்கள் அறிவாலயம் பக்கம் தலைகாட்டுவதைக்கூட தவிர்த்து வந்தார். இந்தநிலையில், கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருக்கும் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்  ஸ்டாலின் என்று சிலர் ஓப்பனாகவே புலம்ப ஆரம்பித்தனர். ``அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தி ஏராளமாகச் செலவு செய்திருக்கும் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்” என்ற இரண்டாம் கட்ட தலைவர்  வருத்தப்பட்ட செய்தி ஸ்டாலின் காதுக்கும் சென்றுள்ளது. 

உடல்நிலை சரியில்லாமல் அப்போலோவில் அனுமதிக்கபட்ட பின் வீட்டுக்குத் திரும்பிய ஸ்டாலினிடம் இந்தத் தகவல்கள் வந்து சேர்ந்த பிறகு, தீவிர யோசனையில் இறங்கியுள்ளாராம். கடந்த வாரமே, தனக்கு நெருக்கமான சிலரிடம் துணை பொதுச் செயலாளர் பதவிக்கு மேலும் சிலரை நியமித்தால் என்ன என்று கேட்டுள்ளார். அந்தத் திட்டத்தை இப்போது கையில் எடுக்கும் முடிவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டாராம். ஓய்வுக்குப் பிறகு அடுத்த வாரம் அறிவாலயத்துக்கு என்ட்ரி கொடுக்கும் ஸ்டாலின் துணை பொதுச் செயலாளர் குறித்த வேலையில் இறங்க உள்ளார். தி.மு.க-வில் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஐந்து பேருக்கு இந்த வாய்ப்பு இப்போது வழங்கப்பட உள்ளது என்கிறார்கள் அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்கள்.