Published:Updated:

சவுதி அரேபியாவில் ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் நியமனம்!

சவுதி அரேபியாவில் ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் நியமனம்!
சவுதி அரேபியாவில் ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் நியமனம்!

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நாடு முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவிலும் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நியமித்துள்ளார். 

அரசியல் கட்சியை விரைவில் தொடங்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தன் ரசிகர் மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்து செயல்பட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். ரசிகர் மன்றத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் பணம் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாகப் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் புகார்கள் எழுந்த வருகின்றன. 

ஆனால், இத்தகைய விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன்,தேர்தலுக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் கமிட்டியை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூத் கமிட்டி நியமனங்களில் குழறுபடி செய்யும் மாவட்ட நிர்வாகிகளை மாநில நிர்வாகிகள் நீக்கி வருகிறார்கள். அதுவும் மாவட்ட நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. 

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி நியமனங்கள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வெளிநாடுகளிலும் மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமனம் செய்வதிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், சவுதி அரேபியாவின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகியான சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சவுதி அரேபியாவுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தலைவரின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சவுதி அரேபியா நாட்டின் செயலாளராக மோகன், துணைச் செயலாளராக பழனி, இணைச் செயலாளர்களாக பாஸ்கரன், வீரமணி, பாலமுருகன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக அல் முகமத், அரசு, கிருஷ்ணன், பாபு, மாயன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியா நாட்டின் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.