வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (30/09/2018)

கடைசி தொடர்பு:17:30 (30/09/2018)

`பதவிக்கு ஆபத்து?’ - எம்.ஜி.ஆர் சிலையை சிறைவைத்திருக்கும் உணவுத் துறை அமைச்சர்!

அ.தி.மு.க அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை வெகுவிமரிசையாகக் கொண்டாடிவரும் நிலையில் மன்னார்குடியில் அமைச்சர் ஆர்.காமராஜ் ஏற்பாட்டில் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை திறக்கப்படாமல் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்கள் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள். அந்த இடத்தில் மர்ம நபர்கள் `எம்.ஜி.ஆர் சிலையை சிறை வைத்துவிட்டு எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவா’ என்ற வாசகத்துடன் அச்சடிக்கப்பட்ட ஃபிளக்ஸ் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

மன்னார்க்குடி ராஜாகோபாலசாமி கோயிலுக்கு அருகில் உணவுத்துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்டச் செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.ஜி.ஆர் சிலை வைப்பதற்கு ஏற்பாடு செய்ததோடு, அதற்காக புதிய எம்.ஜி.ஆர் சிலை ஒன்றையும் செய்தார். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட அந்த எம்.ஜி.ஆர் சிலை திறக்கப்படாமல் அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சிலை முழுவதும் தெரியாத அளவில் தார்பாய் கொண்டு மூடப்பட்டு, கயிறு கொண்டு நன்றாகக் கட்டியுள்ளனர். மேலும், சிலை இருப்பது கொஞ்சம்கூட வெளியே தெரியாத அளவிற்கு அதைச் சுற்றி 10 அடி உயரத்திற்கு இரும்பு சீட் கொண்டு அடைத்து விட்டனர். இதுகுறித்து அந்தப் பகுதியினரிடம் பேசினோம். ``அமைச்சர் ஆர்.காமராஜ், கீழ வீதி கோபால சமுத்திரம் அருகே எம்.ஜி.ஆர் சிலை வைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரிடமும் பணம் வசூலித்து, புதிய சிலை ஒன்றும் செய்து அந்த இடத்தில் வைத்தார். எம்.ஜி.ஆர் சிலையைப் பிரமாண்ட விழா எடுத்து திறக்க வேண்டும் என்றும் கூறி வந்தார். இது நடந்து சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால், சிலை திறக்கப்படவே இல்லை.

சிலை வைக்கபட்டிருக்கும் இடத்திற்கு எதிரேதான், அ.தி.மு.க அலுவலகமும் உள்ளது. சிலை வெளியே தெரியாதபடி அடைத்து வைத்திருந்தனர். இப்போது முற்றிலுமாக வெளியே தெரியாதபடி தார்பாய் போட்டு சுற்றிக் கட்டியுள்ளதோடு, இரும்புத் தகடு கொண்டு அந்த இடத்தையே அடைத்து விட்டனர். திருவாரூரில் எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா கொண்டாடபட்டபோது கூட இந்த சிலை திறக்கபடாமல் அடைபட்டு கிடந்தது. இப்போது நூற்றாண்டு நிறைவு விழாவும் நடக்கிறது. ஆனாலும், எம்.ஜி.ஆர் சிலையை மன்னார்குடியில் அமைச்சர் ஒருவரே சிறை வைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மர்ம நபர்கள் பிளக்ஸ் ஒன்றையும் வைத்துள்ளனர்.

ஆர்.காமராஜ், ஆரம்பத்தில் சிலை விஷயத்தில் அதிக ஈடுபாடு காட்டி வந்தார்.பின்னர் சிலை திறப்பு குறித்து ஜோதிடர் ஒருவரிடம் கேட்டுள்ளார் அவர். எம்ஜிஆர் சிலையைத் திறந்தால் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என அந்த ஜோதிடர் கூறியிருக்கிறார் அதனாலேயே, சிலை திறக்கப்படாமல் சிறை வைக்கப்பட்டுள்ளது’’ என்றனர். அமைச்சர் தரப்பினரோ, ``அரசு ஆணைப்படி எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுவதோடு, அதற்கான அனுமதியையும் பெற்றுஎம்.ஜி.ஆர் சிலையைத் திறக்க இருக்கிறோம். அதனால், சிலை திறப்பதற்கு தாமதமாகிறது’’ என்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க