வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (02/10/2018)

கடைசி தொடர்பு:14:53 (02/10/2018)

``பேச்சை நிறுத்துங்கள்”- கிரண்பேடியின் துண்டுச்சீட்டைப் பார்த்து மேடையில் கொந்தளித்த அ.தி.மு.க எம்எல்ஏ

``பேச்சை நிறுத்துங்கள்” என்ற கிரண் பேடியின் துண்டுச்சீட்டைப் பார்த்து மேடையில் கொந்தளித்த அ.தி.மு.க எம்எல்ஏவால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கிரண் பேடி

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற பிரதேசமாக அறிவிக்கும் விழா இன்று கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, அமைச்சர்கள் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.பி. ராதாகிருஷ்ணன், உப்பளம் அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ அன்பழகன் பொதுக்கழிப்பிட வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தொகுதிக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்றும் பேசினார்.

அப்போது பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருப்பதால் உரையை முடித்துக்கொள்ளுமாறு அமைச்சர் நமச்சிவாயம் மூலம் எம்.எல்.ஏ அன்பழகனிடம் தெரிவித்தார் ஆளுநர் கிரண் பேடி. அந்தத் தகவலை துண்டுச் சீட்டின் மூலம் அன்பழகனிடம் தெரிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம். ஆனால், அந்தக் காகிதத்தைத் தூக்கி எறிந்த அன்பழகன் ``நான் ஏன் நிறுத்த வேண்டும், நான் பேசுவேன் தான்” என்று கூறி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதில் அதிருப்தியடைந்த கிரண் பேடி எழுந்து நின்று ``நான் செல்கிறேன்” என்று சொன்னவர், சிறிது நேரத்தில் அன்பழகனைப் பார்த்து ``நீங்கள் செல்லுங்கள்” (You go) என்று கோபமாக ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ அன்பழகன்

அதற்கு ``நான் செல்ல வேண்டும். என்னைப் போகச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நீங்கள் செல்லுங்கள்” என்று கோபமாகப் பேசிய அன்பழகன், தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார். அதனால் மைக்கை நிறுத்தும்படி உத்தரவிட்டார் ஆளுநர். மைக் நிறுத்தப்பட்டதும் மேடையிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறிய எம்.எல்.ஏ அன்பழகன், ``நான் பேசும்போது மைக்கை நிறுத்தச் சொன்னது அவமானப்படுத்தும் செயல்.

இது என்னை மட்டுமல்ல என்னை எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுத்த அனைத்து மக்களையும் அவமானப்படுத்தும் செயல். இதன் மீது உரிமை மீறல் புகார் செய்ய முடியும் என்றால் ஆளுநர் மீது புகார் செய்வேன்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்பழகன் வெளியேறியபின் ஆளுநரும் தனது உரையை நிகழ்த்தவில்லை. பின்னர் புதுச்சேரியை திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி `விழாவில் என்னுடைய அமைச்சரின் வேண்டுகோளை ஏற்க மறுத்ததால் மைக்கை அணைக்குமாறு கூறினேன்’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க