`7 ஆண்டுகள் காத்திருந்தும் ஏமாந்தார் கருணாநிதி!' - கருணாஸ் விவகாரத்தில் வரிந்துகட்டும் எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy angry on karunas activities against speaker

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (04/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (04/10/2018)

`7 ஆண்டுகள் காத்திருந்தும் ஏமாந்தார் கருணாநிதி!' - கருணாஸ் விவகாரத்தில் வரிந்துகட்டும் எடப்பாடி பழனிசாமி

சட்டமன்றம் கூடுவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாக கருணாஸைத் தகுதிநீக்கம் செய்துவிட்டால், இந்த நோட்டீஸ் செல்லாததாகிவிடும். இதை அறிந்துதான், கருணாஸுக்கு ஆதரவாக தி.மு.க தரப்பு கொந்தளிக்கிறது.

`7 ஆண்டுகள் காத்திருந்தும் ஏமாந்தார் கருணாநிதி!' - கருணாஸ் விவகாரத்தில் வரிந்துகட்டும் எடப்பாடி பழனிசாமி

திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸைக் கைது செய்வதற்காகக் காத்திருக்கிறது நெல்லை போலீஸ். `சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் நோட்டீஸைக் கொடுத்திருக்கிறார் கருணாஸ். இந்த நோட்டீஸால் தனபால் பதவிக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரைக் கைது செய்து நெல்லைக்கு அழைத்துச் செல்வதற்காகக் காத்திருக்கிறது காவல்துறை. இந்த நிலையில், நேற்று கருணாஸைச் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன். இந்தச் சந்திப்பை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது ஆளும்கட்சி. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும் நோட்டீஸை சட்டப்பேரவைச் செயலாளரிடம் அளித்திருக்கிறது கருணாஸ் தரப்பு. இந்த மனுவுக்கு 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் கருணாஸைச் சந்தித்திருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அமைச்சர்கள். 

``சபாநாயகர் தனபால் மீது கருணாஸ் கொண்டு வரப் போகும் நம்பிக்கையில்லாத் தீர்மானம், முக்கிய மைல்கல்லாக இருக்கப் போகிறது. இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வரலாம் எனக் கருணாஸுக்கு அறிவுறுத்தியவர்கள் யார் என்பதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கேள்வியாக இருக்கிறது. ஸ்டாலின் சொல்லி கருணாஸ் செயல்படுகிறாரா... அல்லது தினகரன் தரப்பின் தூண்டுதலா எனக் கோட்டை வட்டாரத்தில் விவாதம் நடக்கிறது" என விவரித்த அரசியல் விமர்சகர் ஒருவர், ``இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 179-ன்படி கருணாஸ் அனுப்பிய நோட்டீஸ் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்படி, ஒரு சபாநாயகரை எப்படியெல்லாம் பதவி நீக்கம் செய்யலாம் என்பதை அந்தச் சட்டப்பிரிவு வரையறுக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்றாவது ஷரத்தின்படி, எம்.எல்.ஏவாக இருக்கும் ஒருவர், சபாநாயகர் மீது தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து பதவியிலிருந்து நீக்கலாம் என்கிறது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 179-ஐ மையமாக வைத்துத்தான், ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கான சட்டப்பேரவை விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கின்றன. அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற சட்டப்பிரிவு 68-ன்படி சபாநாயகர் மீது ஏன் நம்பிக்கை இல்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு சட்டமன்றச் செயலாளரிடம் மனு கொடுக்க வேண்டும். 

பி.எச்.பாண்டியன்அந்த மனுவின் நகலை சபாநாயகருக்கும் கொடுக்க வேண்டும். இதன்பிறகு பிரிவு 69-ன்படி 14 நாள்கள் கால இடைவெளியைக் கொடுத்து, அந்த மனுவைச் சட்டமன்றச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும். சட்டமன்றம் கூடும் முதல்நாளில் இந்த மனுவை முதல் அலுவலாகச் சேர்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து பிரிவு 70-ன்படி சபை கூடும் அன்றைய தினத்தில் சபாநாயகர் தன்னுடைய ஆசனத்தில் அமரக் கூடாது. அவருக்குப் பதிலாக யாராவது ஒருவர் சபையை நடத்தி, 14 நாள்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டதா எனப் பார்க்க வேண்டும். பேரவை உறுப்பினர் கருணாஸ் தீர்மானத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறீர்கள் எனக் கேட்க வேண்டும். பிரிவு 70-ன்படி குறைந்தபட்சம் 35 உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த 35 பேரும் எழுந்து நின்றாலே போதும். அன்றைய தினமே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது 7 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டும். இப்படியொரு இக்கட்டான நிலையை சபாநாயகருக்குக் கொடுத்திருக்கிறார் கருணாஸ்" என்றார் விரிவாக. 

அதேநேரம், கருணாஸ் அனுப்பிய நோட்டீஸை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுகுறித்துப் பேசிய அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், ``சட்டமன்றம் கூடுவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாக கருணாஸைத் தகுதிநீக்கம் செய்துவிட்டால், இந்த நோட்டீஸ் செல்லாததாகிவிடும். இதை அறிந்துதான், கருணாஸுக்கு ஆதரவாக தி.மு.க தரப்பு கொந்தளிக்கிறது. கடந்தகாலச் சட்டமன்ற வரலாறுகளைப் பார்த்தால், கருணாஸ் மனு ஒரு பொருட்டே அல்ல என்பது தெரிந்துவிடும்" என்றவர்,

``1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, `நேரு உறுதிமொழியைச் சட்டமாக்க வேண்டும்' எனக் கூறி கருணாநிதி, அன்பழகன், ராஜ்யசபா உறுப்பினராக இருந்த முரசொலி மாறன் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதாவது, `இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியைச் சட்டமாக்க வேண்டும்' எனக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தை எரித்தது தி.மு.க. இதனால் கோபமடைந்த எம்.ஜி.ஆர், 'என்னுடைய ஆட்சியில் மட்டும் தகராறு செய்ய வருகிறீர்களா?' எனக் கேட்டார். இதையடுத்து, 'அரசியலமைப்புச் சட்டப்படி ரகசியக் காப்புப் பிரமாணம் செய்திருக்கிறீர்கள். அதை மீறி அரசியலமைப்புச் சட்டத்தை எரித்ததால், தகுதிநீக்கம் செய்கிறேன்' என அறிவித்தார் சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் கருணாநிதி. 7 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கு, 89-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக வந்த பிறகுதான் முடிவுக்கு வந்தது. அதுவும், `பி.எச்.பாண்டியன் நடவடிக்கை சரி' என்ற உத்தரவுதான் கிடைத்தது. எனவே, கருணாஸ் விவகாரத்தில் வானளாவிய அதிகாரத்தை சபாநாயகர் தனபால் பயன்படுத்துவார்" என்றார் விரிவாக.