வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (04/10/2018)

கடைசி தொடர்பு:17:54 (04/10/2018)

`ஸ்டாலின் நினைத்ததைச் செயல்படுத்த பா.ஜ.க இல்லை!' - கமலாலயத்தில் கொந்தளித்த தமிழிசை

`மக்களைத் திரட்டிப் போராடுவேன்' என்கிறார் ஸ்டாலின். அவர் மக்களைத் திரட்டுவதற்குள் இடைத்தேர்தலில் ஆட்டம் கண்டுவிடுவார் என்றார் தமிழிசை.

`ஸ்டாலின் நினைத்ததைச் செயல்படுத்த பா.ஜ.க இல்லை!' - கமலாலயத்தில் கொந்தளித்த தமிழிசை

டைத்தேர்தலுக்குத் தயாராகி வருகிறது திருப்பரங்குன்றமும் திருவாரூரும். 'இன்னும் சில நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கள நிலவரம் யாருக்குச் சாதகமாக இருக்கப்போகிறது என்பதைப் பற்றி மேலிடத்துக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார் தமிழிசை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

மதுரையில் அ.தி.மு.க நிர்வாகிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தை இன்று நடத்தியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால், அதுகுறித்துதான் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்காக 17 அமைச்சர்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் முதல்வர். அதேநேரம், தொகுதி முழுக்க சுவர் விளம்பரங்களை ஆக்கிரமித்திருக்கிறது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். தொகுதி மக்களுக்குப் பரிசுப் பொருள்களை வாரியிறைப்பதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. வழக்கம்போல, இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க-வுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளைப் பற்றித்தான் அதிகம் கவலைப்படத் தொடங்கியிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க. 

பா.ஜ.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் கள நிலவரத்தை ஆய்வு செய்திருக்கிறது பா.ஜ.க. இதில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தனியாக ஆய்வை நடத்தியிருக்கிறது. அதில், 'திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஆர்.கே.நகரில் கிடைத்த ரிசல்ட்தான், தி.மு.க-வுக்கு இங்கும் கிடைக்கப்போகிறது. திருவாரூரில் அழகிரி நின்றால் வெற்றி பெறுவார். இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க மோசமான நிலையில்தான் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் மூன்று அல்லது நான்காவது இடத்துக்குத் தி.மு.க தள்ளப்பட்டுவிடும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தி.மு.க தரப்புக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் தமிழிசை. 'எங்களுக்கு உதவி செய்தால், உங்களுக்கு நாங்கள் உதவத் தயார்' என்பதுதான் பா.ஜ.க-வின் சிங்கிள் அஜெண்டாவாக இருக்கிறது. 

எடப்பாடி பழனிசாமிஇதற்கு தி.மு.க தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வராததால் கொதிப்பில் இருக்கிறார் தமிழிசை. 'ஸ்டாலின் நினைத்ததைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு இல்லை' என நிர்வாகிகளிடம் ஆவேசப்பட்டவர், தொடர்ந்து சில விஷயங்களைப் பட்டியலிட்டார். அவர் பேசும்போது, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்துவது தொடர்பாக ஸ்டாலினிடம் பேசும்போது, 'உங்களுக்கு டெபாசிட் கிடைக்காது. தேர்தலை நிறுத்திவிடுவோம். எங்களுக்கு 15 எம்.பி சீட்டுகளை உறுதிப்படுத்துங்கள்' எனக் கேட்டபோது, 'நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம்' என்றார் ஸ்டாலின். தேர்தல் முடிவில் நான் சொன்னதுதான் நடந்தது. பிறகு, 'மூன்று மாதத்தில் தினகரன் உள்ளே போவார்' என்றார் ஸ்டாலின். அவர் ஜெயிலுக்குப் போய்விட்டால், அவர் பக்கம் உள்ள 8 சதவிகித ஓட்டுகளும் தி.மு.க பக்கம் வரும். இது காங்கிரஸ் கூட்டணிக்குக் கூடுதல் பலத்தைத் தரும். இதனால் பா.ஜ.க-வுக்கு என்ன லாபம். அதனால்தான் அவர் மீதான வழக்குகளைத் துரிதப்படுத்தாமல் இருக்கிறோம். இப்போது, `மக்களைத் திரட்டிப் போராடுவேன்' என்கிறார் ஸ்டாலின். அவர் மக்களைத் திரட்டுவதற்குள் இடைத்தேர்தலில் ஆட்டம் கண்டுவிடுவார். ஆர்.கே.நகரில் கொடுத்த ஆஃபர் அடிப்படையில் எங்கள் பக்கம் வந்தால் அவருக்குத்தான் நல்லது' எனப் பேசியிருக்கிறார்" என விவரித்தவர், 

"இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். இதனால், பா.ஜ.க-வுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதேநேரம், திருப்பரங்குன்றத்திலும் திருவாரூரிலும் பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு குறைவாக இருக்கிறது. இதைப் பற்றிப் பேசிய தமிழிசை, 'நமக்கு அங்கு செல்வாக்கு இல்லை எனத் தலைமையிடம் சொல்லிவிட்டேன். அடையாளத்துக்காக அங்கு போட்டியிடுவோம். இதனால், நமக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினிடம் நான் பேசியபோது, 'எனக்குப் பிரச்னை வந்ததால் பேசுகிறேன்' எனச் சிலர் எள்ளி நகையாடினார்கள். எங்கள் கட்சியில் எனக்கு எதிராக யாரெல்லாம் சதி வேலை செய்கிறார்கள்; குழி பறிக்கிறார்கள் என்பது தெரியும். இப்போதும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. `நாடாளுமன்றத் தேர்தல்தான் முக்கியம்' எனத் தலைமை கூறிவிட்டது. இடைத்தேர்தலில் ஸ்டாலின் தோற்றுவிட்டால், அழகிரி செல்வாக்கைப் பெற்றுவிடுவார். எங்கள் கட்சியிலும், `அழகிரி செல்வாக்கு பெறட்டும்' எனக் கூறக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஸ்டாலின் தலைமைதான் கேள்விக்குள்ளாகப்போகிறது' என்றார். அவரது கருத்தைக் கட்சி நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்" என்றார் விரிவாக.