வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:22 (06/10/2018)

` ரகசியங்களை மறுக்க மாட்டார் பன்னீர்செல்வம்!' - செய்தியாளர் சந்திப்பில் தகித்த தினகரன்

`அவருக்கும், எனக்கும் தெரிந்த உற்ற நண்பர் மூலம் தூதுவிட்டார். அதன் பேரில் எங்களுக்குத் தெரிந்த ஒரு நண்பரின் வீட்டில் நாங்கள் பேசினோம்' என ஓ.பி.எஸ் உடனான சந்திப்பு குறித்து  டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார்

தினகரன்

தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை சந்திக்க நேரம் கேட்டதாக அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், ``கடந்த வருடம் நான் திகாரில் இருந்து வெளியில் வந்த பிறகு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தார். அவருக்கும், எனக்கும் தெரிந்த உற்ற நண்பர் மூலம் தூதுவிட்டார். அதன் பேரில் எங்களுக்குத் தெரிந்த ஒரு நண்பரின் வீட்டில் நாங்கள் பேசினோம். அப்போது தான் தவறு செய்துவிட்டதாகவும் அதற்கு வருந்துவதாகவும் அவர் என்னிடம் கூறினார். தன்னிடம் உள்ள 11 எம்.எல்.ஏ-க்களுடன் வந்து என்னுடன் இணைந்துகொள்வதாகவும் கூறினார். முதலில் நான் அவரைப் பார்க்க மறுத்தேன். பிறகு என் கட்சியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி ஆகியோர் என்னிடம் கூறி அவரை பார்க்கவைத்தனர். பிறகு ஓ.பி.எஸ்ஸின் தம்பிகூட என் வீட்டுக்கு நேரடியாக வந்து அண்ணன் உங்களைச் சந்திக்க வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து கேட்டதால்தான் நான் அவரைச் சந்தித்தேன். அதன் பிறகு நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை மறந்துவிட்டேன். என்னைச் சந்தித்தபிறகுதான் அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தற்போது துணைமுதல்வராக உள்ளார். 

மறைமுகமாக என்னைச் சந்திக்க வேண்டும் எனக் கூறிவிட்டு வெளியில் நான் ஒரு துரோகி, நான் அவரை மிரட்டினேன் என்று கூறிவந்தார். சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு நிகழ்வுக்கான உதாரணமாக மிகச் சாதாரணமாகவே இதை நான் கூறினேன் ஆனால், அதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டனர். மேலும், கடந்த மாதம் இறுதியில்கூட அதே நண்பர் மூலம் என்னைச் சந்திக்க வேண்டும் என ஓ.பி.எஸ் கூறினார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் இதை தற்போது கூறுகிறேன். கடந்த வருடம் நாங்கள் சந்தித்த விஷயம் எங்கள் கட்சி நிர்வாகிகள் பலருக்குத் தெரியும் ஆனால், யாரும் இதுவரை வெளியில் சொல்லவில்லை. இன்று வெளியில் சொல்லும் சூழ்நிலையை ஓ.பி.எஸ்.தான் உருவாக்கியுள்ளார். இப்போதுகூட நான் சொல்லாமல்தான் இருந்திருப்பேன், ஆனால் ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து என்னைச் சந்திக்க வேண்டும் எனப் பல விண்ணப்பங்கள் வருகிறது. அதைத் தவிர்க்கவே நான் கூறுகிறேன். ஆனால், பலர் ஓ.பி.எஸ் உடனான என் டீல் முடியாததால்தான் வெளியில் கூறுவதாக தெரிவித்து வருவது பெரும் தவறு. தற்போது நடக்கும் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்களித்தார் ஓ.பி.எஸ். அவர் என்னைக் குறைகூறுவது எந்த விதத்தில் நியாயம். 

நான் தான் பன்னீர் செல்வத்தை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்துவைத்தேன், ஆனால், அவர் தானாக வளர்ந்ததாக நினைத்துக்கொண்டுள்ளார். அ.தி.மு.க-வில் இணைய வேண்டும் என நான் தூதுவிட்டதாக தங்கமணி கூறியது பொய். ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இன்னும் பத்துபேருடன் நான் என்றும் இணையமாட்டேன். அவர்களுடன் இணைவது தூக்கில் தொங்குவதற்குச் சமம். நான் தூதுவிட்டதாக கூறுவதற்கு ஆதாரம் இருந்தால் தங்கமணி அதை முதலில் காட்டட்டும். கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் இருக்கும்போது வீரமணி, வேலுமணி போன்றவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். பிறகு நான் ஆளுநரிடம் மனு அளிக்கும்போது என்னை துணை முதல்வராக்க வேண்டும் எனக் கூறியவர்களில் ஒருவர் தான் தங்கமணி. என் ஸ்லீப்பர் செல் ஓ.பன்னீர் செல்வம் இல்லை. வாக்கெடுப்பின்போது அவர்கள் நிச்சயம் வெளியில் வருவார்கள். பன்னீர் செல்வம் என்னைச் சந்தித்ததாகக் கூறுவதை அவரால் மறுக்கமுடியாது. ஏனெனில் இதில் ரகசியம் உள்ளது. அவரின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. ஏதாவது செய்து தன்னை முதல்வராக்க வேண்டும் என அவர் போராடுகிறார். அதனால்தான் தர்மயுத்தமும் நடத்தினார் என அனைவருக்கும் தெரியும்.” இவ்வாறு பேசியுள்ளார்.