வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (06/10/2018)

கடைசி தொடர்பு:13:06 (06/10/2018)

`முதல்வரின் உறவினர் புனரமைப்பு பணிகள் செய்த தடுப்பணை சேதம்!' - குற்றம்சாட்டும் விவசாயிகள்

பட்டுக்கோட்டை நசுவினி ஆற்றின் தடுப்பணை பொதுப்பணித்துறை சார்பில் சமீபத்தில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஒருவருவர்தான் இதற்கான டெண்டரை எடுத்து பணிகள் செய்தார் என கூறப்படுகிறது. பணிகள் முடிந்து ஒரு மாதத்தில் தரைப்பகுதியில் போடப்பட்ட கான்கீரீட் கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே உள்ள வெண்டாக்கோட்டையில் காவிரி உபவடி நிலப்பகுதியான நசுவினி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று உள்ளது. இந்தத் தடுப்பணை சேதமடைந்ததால் அதை புனரமைப்பதற்காக பொதுப்பணி துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான டெண்டரை முதல்வர் பழனிசாமியின் உறவினர் என்று சொல்லப்படும் ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.பி.பி.இன்ப்ரா என்ற நிறுவனம் எடுத்தது. நசுவியாற்றின் தடுப்பணை மற்றும் சில பணிகள் என மொத்தம் 1 கோடியே 94 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போதே விவசாயிகள் சிலர் `யார் டெண்டர் எடுத்துள்ளது. எவ்வளவு ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் செய்யப்படுகிறது என எந்த விவரமும் இல்லாமல் பணிகள் நடக்கிறது. அந்த விவரங்கள் அடங்கிய போர்டை உடனே வையுங்கள்’ என பொதுப்பணித்துறை அதிகாரிகளை முறையிட்டனர்.

அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல்வரோட உறவினர் ஒருவர்தான் டெண்டர் எடுத்திருக்கிறார் எனக் கூறியதோடு அதன் பிறகே போர்டு வைத்துள்ளனர். கான்கீரீட் பணிகள் நடக்கும்போது தரை தளத்துக்கு மேலே கம்பி கொண்டு கட்டி அதன் மேலே சிமென்ட் கலவை போட்டால்தான் திடமாக இருக்கும். ஆனால்,  இவர்கள் அப்படியே சிமென்ட் கலவையைப் போட்டுவிட்டார்கள். இந்தப் பணிகள் முடிந்து ஒரு மாதத்துக்கு மேல்தான் ஆகிறது. தற்போது டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக வரத்தொடங்கியுள்ளது.

இதையடுத்து நசுவினி ஆற்றின் நான்கு மதகுகள் உள்ள நிலையில் ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மதகின் வழியாக வெளியேறும் தண்ணீருக்கே கான்கீரீட் கற்கள் பெயர்ந்து கடும் சேதமடைந்து விட்டது. மற்ற மதகுகளைத் திறந்தால் அணையின் நிலைமை என்னவாகும் என்பதோடு இதே நிறுவனம் இன்னும் பல பணிகளைப் பார்த்துள்ளது. அவையும் இப்படி தரம் இல்லாமல் தான் கட்டப்பட்டிருக்கும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இது குறித்து பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் எதுவும் கூற மறுக்கிறார்கள்' என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க