Published:Updated:

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இல்லை: இலங்கை அரசுக்கு லத்திகா சரண் பதில்

சென்னை, மார்ச் 10,2011
   
தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் முகாம்கள் இயங்கி வருவதாக கூறியுள்ள இலங்கை அரசுக்கு தமிழக தமிழக டிஜிபி லத்திகா சரண் மறுப்பு தெரிவித்துள்ளார். ##~~##

இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய அந்நாட்டு பிரதமர் டி.எம். ஜெயரத்ன, தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ரகசிய பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், இலங்கையில் போரை உருவாக்கவும், இந்தியத் தலைவர்களைக் கொல்லவும் தமிழகத்தில் அவர்கள் பயிற்சி முகாம்களை நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இலங்கை அரசின் புகார்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று தமிழக டிஜிபி லத்திகா சரண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் குறித்து தமிழக காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு விழிப்புடன் கண்காணித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், கடலோர பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

அண்மையில் சென்னையில் புத்த மையம் ஒன்று தாக்கப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்கிற ரீதியிலான ஜெயரதனவின் புகாரையும் தவறு என மறுத்துள்ள லத்திகா சரண், அந்தத் தாக்குதலை நடத்தியது இலங்கைத் தமிழர் ஆதரவாளர்களே தவிர விடுதலைப்புலிகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் முகாம்கள் இயங்கி வருவதாக இலங்கை தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசும் மறுத்துள்ளது.

அதுபோன்ற முகாம்கள் இருப்பதாகக் கூறுவதை உறுதியாக மறுக்கிறோம் என வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை இந்தியாவின் கவனத்துக்கு இலங்கை கொண்டுவரவில்லை என்றும்,
இலங்கை அரசு இதுபோன்று கூறுவது உண்மையில் துரதிருஷ்டவசமானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு