சர்ச்சையில் அண்ணன்... தம்பிக்கோ பதவி! - மாஸ்டர் பிளானில் ஓ.பி.எஸ் | OPS plans to get new post for his brother

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (06/10/2018)

கடைசி தொடர்பு:20:22 (06/10/2018)

சர்ச்சையில் அண்ணன்... தம்பிக்கோ பதவி! - மாஸ்டர் பிளானில் ஓ.பி.எஸ்

“தினகரனை சந்தித்தது உண்மை” என்று பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டது அ.தி.மு. க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது பூதாகரமாக வெடித்துள்ள இந்த விவகாரம், அ.தி.மு.க-வினர் மத்தியில் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்தில்  ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பன்னீர்செல்வம் -ராஜா

பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தது உண்மைதான் என்று தினகரன் தெரிவித்தபோது, கூடுதலாக மற்றொரு தகவலையும் தெரிவித்திருந்தார். `பன்னீர்செல்வம் மட்டுமல்ல, அவரின் தம்பி ராஜாவும் என்னைச் சந்தித்து கட்சியில் இணைவதுகுறித்துப் பேசினார். அவரது அண்ணனை இணைத்துக்கொள்வது பற்றியும் பேசினார்’’ என்றெல்லாம் தினகரன் குற்றசாட்டை வைத்திருந்தார். ஆனால், இதற்கு பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் தரவில்லை. தினகரனை, ஓ.பி.எஸ் சந்தித்த விவகாரம் முதல்வர் தரப்பிலும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது நடவடிக்கையால் ஆட்சிக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் முதல்வர் தரப்பில் எழுந்ததால், அவர்கள் வேறு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, மதுரை,தேனி மாவட்டங்களின் ஆவின் பால் சேர்மன் பதவிக்கு இன்று விண்ணப்பித்துள்ளார். ஏற்கெனவே தனது மகன் ரவீந்திரநாத், தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக இருந்துவரும் நிலையில், தம்பிக்கு அரசு பதவிக்கு காய் நகர்த்தியுள்ளார் பன்னீர்செல்வம். குடும்ப அரசியலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பன்னீர்செல்வத்தின் குடும்பத்திலேயே, அதே குடும்ப அரசியல் நடப்பது அ.தி.மு.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், மறுபுறம் தனது தம்பிக்கு பதவியைப் பெற்றுத்தருவதில் குறியாக இருக்கிறார் ஓ.பி.எஸ். 
 


[X] Close

[X] Close