சமூகம்
Published:Updated:

“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது!”

“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது!”

“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது!”

‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவைக் கேட்காமல் தேனியில் எந்தத் தொழிலும் செய்ய முடியாது’ என்று சொல்லி, திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மிரட்டிப் பணம் பறித்த கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது!”

திருச்சி தில்லை நகரில் வசிப்பவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி. இவரைத்தான், அந்தக் கும்பல் மிரட்டியிருக்கிறது. கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ‘‘தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் ஓர் அலுவலகம் திறந்துள்ளேன். பெரியகுளத்தில் ஓர் இடம் இருக்கிறது என்று சொன்னார்கள். அந்த இடத்தைப் பார்த்தோம். பிறகு, திருச்சிக்கு வந்துவிட்டேன். பெரியகுளம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் முகுந்தன் என்பவர் எனக்குப் போன் செய்தார். ‘தேனியில் எங்களை மீறி யாரும் தொழில் செய்ய முடியாது. எங்களுக்குப் பணம் கொடுத்தால்தான், நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய முடியும்’ என்று மிரட்டினார். பிப்ரவரி 21-ம் தேதி எங்கள் திருச்சி அலுவலகத்துக்கு வந்த முகுந்தன் தலைமையிலான ஆட்கள், ‘கட்சி வளர்ச்சிக்கு ஒரு கோடி ரூபாய் கொடு. நீ யாரிடம் போனாலும் எங்களை ஒண்ணும் செய்ய முடியாது’ என மிரட்டினார்கள். ரூ.10 லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டேன். அப்போது, என் கையில் இருந்த 1.50 லட்சம் ரூபாயைப் பறித்துக்கொண்டு போனார்கள். மறுநாளே மீதிப் பணத்தைக் கேட்டு மிரட்டினர். 23-ம் தேதி என் அலுவலகத்துக்கு வந்த அந்தக் கும்பல், ‘ஒழுங்கா பணத்தைக் கொடு, இல்லையெனில் உன்னையும், உன் அலுவலகத்தையும் காலி செய்துவிடுவோம்’ என மிரட்டியது. தேனியில் ஆபீஸ் போட்டதுக்கே இவ்வளவு அக்கப்போர்’’ என்றார் விரக்தியாக.

போலீஸ் தரப்பில் பேசினோம். ‘‘கிருஷ்ணமூர்த்தி அளித்த தகவலின் பேரில் அந்தக் கும்பலைக் கைது செய்தோம். அந்த கும்பலைச் சேர்ந்த முகுந்தன் என்பவர், ‘எதுவாக இருந்தாலும் அண்ணன் ஓ.ராஜாவிடம் ஒரு வார்த்தை கேளுங்கள்’ என்றார். அதை திருச்சி கமிஷனர் அமல்ராஜின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். ஓ.பி.எஸ்., ஓ.ராஜா ஆகிய இருவரிடமும் கமிஷனர் பேசினார். அதையடுத்து ஏழு பேர் மீதும் கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ஓ.ராஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்” என்றார்கள்.

“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது!”

ஓ.ராஜாவிடம் கேட்டபோது,“இதுபோன்ற சட்டவிரோதச்  செயல்களை நான் எப்போதும் ஆதரித்ததில்லை. இது தொடர்பாக, போலீஸார் என்னிடம் கேட்டனர். ‘இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். யார் யாரோ எங்கள் பெயரைச் சொல்லி பிரச்னை செய்தால், அவற்றுக்கெல்லாம் நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?’’ என்றார்.

திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜைத் தொடர்புகொண்டோம். நாம் சொன்ன தகவல்களைக் கேட்டுக்கொண்ட அவர், “ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்” என அழைப்பைத் துண்டித்தார். தில்லை நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பேசியபோது, ‘‘தகவல் கிடைத்ததும் உடனே விசாரணையில் இறங்கி, அந்தக் கும்பலை விரட்டிப் பிடித்தோம். இருவர் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்’’ என்றார்.

அந்த இருவரை எப்படியும் கைதுசெய்துவிடுவீர்கள்தானே!

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்