சமூகம்
Published:Updated:

சவுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்!

சவுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்!
பிரீமியம் ஸ்டோரி
News
சவுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்!

ரவுண்டு கட்டும் அமைச்சர்கள்

ஒரு காலத்தில் மணல் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த புதுக்கோட்டை ராமச்சந்திரன் தரப்பு, ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மணல் பிசினஸில் மீண்டும் களமிறங்கிவிட்டது. இந்த முறை ஆற்றுமணலுக்குப் பதிலாக, சவுடு மணல் அள்ளும் பணியைச் சத்தமில்லாமல் செய்துவருகிறது என்ற தகவல், ஆளும்கட்சியின் பிசினஸ் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியிலேயே, மணல் பிசினஸில் கோலோச்சியவர்கள் சேகர் ரெட்டியும், புதுக்கோட்டை ராமச்சந்திரனும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சேகர் ரெட்டி மற்றும் ராமச்சந்திரன் தரப்புமீது வருமான வரித் துறை வலைவிரித்தது. அதையடுத்து, மணல் பிசினஸிலிருந்து கொஞ்சகாலம் ஒதுங்கியிருந்தனர். மணல் குவாரிகளை அரசே ஏற்றும் நடத்தும் என முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்ததால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. சமீபத்தில் இந்தத் தடை தளர்த்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் எட்டு ஆற்றுமணல் குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதைத்தவிர நாகப்பட்டினம், கடலூர், ராம நாதபுரம், விருதுநகர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சவுடு மணல் குவாரிகள் செயல்படுகின்றன.இந்த நிலையில், சவுடு மணல் பிசினஸில் சத்தமில்லாமல் நுழைந்து, தனது மணல் சாம்ராஜ்யத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது ராமச்சந்திரன் தரப்பு.

சவுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்!

இதுகுறித்து ஆளும்கட்சிக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். ‘‘ஆற்றுமணல் தட்டுப்பாடால், சவுடு மணலுக்கு மவுசு கூடிவிட்டது. ஆற்றங்கரை ஓரங்களிலும், மணற்பாங்கான நிலங்களிலும் கிடைக்கும் இந்த மணல் கிட்டத்தட்ட ஆற்றுமணலைப் போன்றே இருப்பதால், இதற்கான அனுமதியை முறைப்படி வாங்குகிறார்கள். அதன்பின் ஆற்றுமணலையும் தாறுமாறாக அள்ளி, சவுடு மணல் என்ற போர்வையில் விற்பனை செய்கிறார்கள்.

சவுடு மணல் அள்ளுவதற்கான அனுமதியை மாவட்ட கனிமவளத் துறை வழங்குகிறது. தனிப் பட்ட நபர்களின் பட்டா நிலங்களில் அள்ளப் போவதாக விண்ணப்பம் செய்து இதற்கான
அனுமதியைப் பெறுகிறார்கள். இதனால், அனுமதி பெறுவது எளிதாக இருக்கிறது. ஆற்றுமணல் போன்றே சவுடு மணலுக்கும் பர்மிட் முறை உள்ளது. இந்த பர்மிட், கனிமவளத் துறையால் வழங்கப்படும். எத்தனை பர்மிட்கள் வழங்கப்படுகின்றனவோ, அத்தனை லோடு மட்டுமே அள்ள வேண்டும். ஒரு மாவட்டத்தில் எத்தனை சவுடு மணல் குவாரிகள் இருந்தாலும், அவை அனைத்தும் ராமச்சந்திரன் தரப்பின் மேற்பார்வையில்தான் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சரின் ஒப்புதலுடன், ராமச்சந்திரன் ஒப்புதலும் கிடைத்த பிறகுதான், சவுடு மணலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டம் ஒன்றில், ஒரு குறிப்பிட்ட அமைச்சரை ஒதுக்கிவிட்டு இன்னொருவரிடம் இந்தக் குவாரி டீலிங் தரப்பட்டதால், இருவருக்கும் மோதல் எழுந்துள்ளது. வெயில் மாவட்டத்தைச் சேர்ந்த அதிரடியாகப் பேசும் அமைச்சருக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் குவாரி தருவதாகச் சொன்னார்களாம். ‘என் ஊரை விட்டுட்டு அவ்வளவு தூரம் போகணுமா?’ என அவர் கொந்தளித்தாராம்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், நடிகர் ரித்தீஷ் கட்டுப்பாட்டில் இந்த பிசினஸை ராமச்சந்திரன் தரப்பு ஒப்படைத்து உள்ளதாகப் பேச்சு. மத்திய மாவட்டங்களில் ராமச்சந்திரன் தரப்பே பார்த்துவருகிறது. ஒரு யூனிட் சவுடு மணலுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் 400 ரூபாய். ஆனால், இவர்கள் இரண்டாயிரம் ரூபாய் வரை விற்கிறார்கள்.  சம்பந்தப்பட்ட குவாரியின் உரிமையாளர் தொடங்கி ஆட்சி மேலிடம் வரை எல்லா மட்டங்களிலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

சவுடு மணல் போலவே, கிராவல் மண் அள்ளுவதையும் ராமச்சந்திரன் தரப்பே மேற்பார்வை செய்கிறது. சவுடு மணல் ஒரு லோடு பத்தாயிரம் ரூபாய் முதல் பன்னிரண்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முறை டோக்கன் வாங்கிவிட்டுப் பலமுறை மணல் கடத்தலும் நடைபெறுகிறது. போலி டோக்கன் மூலம் மணல் கடத்து வது வெளிப்படையாகவே தெரிந்தாலும், அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. சவுடு மணல் தொழிலில் ஆளும் தரப்புக்கும் ராமச்சந்திரன் தரப்புக்கும் சத்தமில்லாமல் லட்சக்கணக்கில் பணம் சென்றுகொண்டிருக்கிறது” என்றனர்.

சவுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்!

மத்திய மாவட்டத்தில் ஒரு பெண் அமைச்சரும், மற்றொரு அமைச்சரும், சவுடு மணல் உரிமையைத் தங்களுக்கு நெருக்கமான ஒருவர் பெயரில் எடுத்து ஆற்றுமணலை அள்ளிவருகிறார்கள். பல அமைச்சர்களும் சவுடு மணல் குவாரி அமைப்பதில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். தமிழக அரசு, விரைவில் 13 ஆற்று மணல் குவாரிகளைத் திறப்பதற்கான இ-டெண்டரை அறிவிக்க உள்ளது. இந்தக் குவாரிகளை எடுக்க ராமச்சந்திரன் ஆளும்தரப்புடன் பேசி வருகிறார்.  ஏப்ரல் மாதத்துக்குள் மணல் தொழில் யாருக்கு என்று முடிவாகிவிடும் என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

வருமானவரித் துறையின் கண்காணிப்பில் இருந்துவரும் ராமச்சந்திரன், மீண்டும் மணல் சாம்ராஜ்யத்தைக் கையிலெடுக்கத் துணிந்தது எப்படி என்று புலம்புகிறார்கள் அவருக்கு எதிர்முகாமில் உள்ளவர்கள்.

- அ.சையது அபுதாஹிர்