வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (08/10/2018)

கடைசி தொடர்பு:11:29 (08/10/2018)

தமிழகத்தில் தொடர்கிறதா வாரிசு அரசியல்? உதயநிதியைச் சாடும் எதிர்க்கட்சிகள்

தமிழகத்தில் தொடரும் வாரிசு அரசியல் பற்றிய கட்டுரை...

``எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும், கருத்தும்தான் வாரிசு'' என்றார், தந்தை பெரியார். அவரிடம் சமூக, அரசியல் பாடங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன், 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்து, மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, தன் மகன் மு.க.ஸ்டாலினை அரசியல் வாரிசாக அறிவித்தார். அதன்படி, ஸ்டாலின் தற்போது தி.மு.க. தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். தி.மு.க.-வில் `வாரிசு அரசியல்' என்று ஏற்கெனவே பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போதும் அதே நிலையே அக்கட்சியில் தொடர்வதாக அங்கலாய்க்கிறார்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 

மு.க.ஸ்டாலினுடன் உதயநிதி ஸ்டாலின்

மேலும், ``இதற்காகத்தான் உதயநிதி ஸ்டாலின், சினிமாவில் நடித்துப் பிரபலமானார். சினிமாவில் வளர்ந்த பின்பு ஒரு தி.மு.க. தொண்டராக உதயமாகி, இப்போது அந்தக் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் முதன்மையானவராக இடம்பிடிக்கிறார். பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க-வின் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், நலத்திட்ட உதவி என்ற பெயரில் நிதியுதவிகளையும் வழங்கி வருகிறார். இதனால், தி.மு.க-வில் மு.க..ஸ்டாலினுக்கு அடுத்த வாரிசு உதயநிதிதான் என்ற பேச்சு பரவலாகத் தொடங்கியுள்ளது. தி.மு.க-வில் அவர்களின் குடும்பத்தினரைத் தவிர, வேறு யாரும் தலைமைப் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படியெல்லாம் அவர்கள் செயல்படுகிறார்கள்" என்கின்றனர், அரசியலை உன்னிப்பாகக் கவனித்துவரும் அவர்கள். 

குறிப்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தி.மு.க.-வில் குடும்ப ஆதிக்கம் நடக்கிறது. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி, இப்போதே லைனுக்கு வந்துவிட்டார். தி.மு.க. என்பது கட்சி இல்லை; அது, ஒரு கம்பெனி" எனக் கடுமையாக விமர்சித்தார். முதல்வரின் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருந்த மு.க.ஸ்டாலின், தி.மு.க-வின் அரசியல் வாரிசு குறித்து கருத்துத் தெரிவித்திருந்த பலருக்கும் சாட்டையடி கொடுக்கும் வகையில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதுகுறித்து மு.க..ஸ்டாலின், ``வாரிசு அரசியல் என்று குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பது எல்லாம், வாரிசு இல்லாதவர்களின் புலம்பலாகக் கருதலாம்" என்று தெரிவித்திருந்தார். ஆனாலும், உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு நேரடியாக ஸ்டாலின் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.

என்றாலும், தன்னுடைய என்ட்ரி பற்றி அரசியல் விமர்சகர்கள் வைக்கும் குற்றச்சாட்டை மறுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், ``என்னை, தி.மு.க.-வின் அரசியல் வாரிசு என்கிறார்கள். `ஸ்டாலினுக்குப் பின் அவரது மகன் உதயநிதி இப்போதே வரிசையில் நிற்கிறார்' என்றும் சொல்கிறார்கள். ஆமாம்... நான் வரிசையில்தான் நிற்கிறேன். ஆனால், கட்சியில் தலைமைப் பதவிக்குச் செல்லமாட்டேன். தலைமைப் பதவி என்றில்லை. எந்த உயர்ந்த பதவியையும் வகிக்க மாட்டேன். நான் எப்போதும் தி.மு.க-வின் தீவிரத் தொண்டனாக மட்டுமே இருந்து, கடைசியில் உள்ள தொண்டனுக்கும் தோள்கொடுக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்" என்றார் திட்டவட்டமாக.

எடப்பாடி பழனிசாமி

உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல... அரசியல் தலைவர்களின் வாரிசுகள் பலரும் இதுபோன்ற விமர்சனத்துக்கு ஆளாவது சகஜம்தான். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒருமுறை, ``இந்திய அரசியல், `வாரிசு அரசியல்' ஆக மாறியிருக்கிறதே" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, ``வாரிசு அரசியல் இந்தியாவில் உள்ள பல கட்சிகளில் இருக்கத்தான் செய்கிறது" என்று பதிலளித்திருந்தார். இப்போது அந்த நிலைமை உதயநிதிக்கும் வந்திருக்கிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள், ``மன்னர்கள் காலந்தொட்டே வாரிசு அரசியல் நடக்கிறது. இதெல்லாம் சகஜம்தான். தந்தையிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மன்னர்களைக் கொலைசெய்துவிட்டு, மகன்கள் அரியணை ஏறிய வரலாறுகள் இந்தியாவில் நிறையவே உண்டு. இந்தியாவில், காங்கிரஸைப் பொறுத்தவரை, பண்டித ஜவஹர்லால் நேருவின் குடும்பம்தான் இன்றுவரை அரசியல் செய்துவருகிறது. அதேபோல, காஷ்மீர், உத்தரப்பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பல அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரியணை ஏறியுள்ளனர். தற்போது, தமிழகத்திலும் வாரிசு அரசியல் உருவாகியுள்ளது. 

ரவீந்திரநாத்தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரின் மனைவி வி.என்.ஜானகி முதல்வராகப் பதவியேற்றார். என்றாலும், அந்த ஆட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. அப்போதே வாரிசு அரசியல் இருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும் இருந்த ஜி.கே.மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் தற்போது த.மா.கா. தலைவராக உள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸைப் பின்பற்றி, தற்போது அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவராக அவரின் மகன் அன்புமணி ராமதாஸ் பதவி வகிக்கிறார். எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை வாரிசு அரசியல் என்பது புதிதல்ல.  

தமிழகத்தின் துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், `தற்போதுதான் குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. இனிமேல்தான் யாருக்கு நல்ல நேரம்; யாருக்குக் கெட்ட நேரம் என்பது தெரியவரும்' என்று சொல்லி அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளார். இதைவைத்துப் பார்க்கும்போது, ஓ.பி.எஸ்-ஸைப் பின்பற்றி அவரும் அரசியலுக்கு வர நினைக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது" என்கின்றனர். 

எனவே, தமிழகத்தில் வாரிசு அரசியல் என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்னதான் வாரிசாக இருந்தாலும், கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டாலும், மக்கள் மத்தியில் அவர்களுக்குச் செல்வாக்கு இருந்தால்மட்டுமே தலைவர் பதவியிலும், ஆட்சியிலும் தொடர முடியும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்