பிரதமர் மோடியுடனான முதல்வர் எடப்பாடியின் 20 நிமிடச் சந்திப்பில் நடந்தது என்ன? | Tamil Nadu CM Edappadi palanisamy meet Prime minister modi at delhi

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (08/10/2018)

கடைசி தொடர்பு:15:05 (08/10/2018)

பிரதமர் மோடியுடனான முதல்வர் எடப்பாடியின் 20 நிமிடச் சந்திப்பில் நடந்தது என்ன?

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

முதல்வர் - பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க அனுமதிக்கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 30-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி அவருக்கு இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது. 

எடப்பாடி பழனிசாமி சென்று 15 நிமிடங்கள் கழித்தே பிரதமர் சந்திப்பு அறைக்கு வந்தார். இதில் முதல்வருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உடனிருந்தார். 20 நிமிடங்கள் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவனை அமைப்பது மற்றும் தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு பேரிடர்களில் மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவையில் உள்ள நிவாரண உதவி ஆகியவை தொடர்பான மனுவை பிரதமர் மோடியிடம் அளித்தார் முதல்வர் பழனிசாமி. பின்னர், இறுதி 5 நிமிடங்கள் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து பிரதமர், முதல்வரிடம் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும் அதிகமாக இது தமிழக நலத்திட்டங்கள் தொடர்பான சந்திப்பு மட்டுமே என்று கூறப்பட்டு அது தொடர்பான விசயங்கள் மட்டுமே வெளியில் சொல்லப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், பருவ மழையை எதிர் நோக்கக் காத்திருக்கும் தமிழகம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஓ.பன்னீர் செல்வம்- டி.டி.வி தினகரன் சந்திப்பு போன்ற பல இக்கட்டான சூழ்நிலையில் இவர்களில் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தில் நிலைகள் மற்றும் தமிழகத்துக்கு தேவையான நிதியும் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் எனவும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றியமைக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினேன். உள்ளாட்சிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவை மானியம் மற்றும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைக்கவேண்டுமென கேட்டுக்கொண்டேன். சென்னைக்கு நிரந்தர வெள்ள தடுப்பு கட்டமைப்புகளை உருவாக்க 4,445 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன். கர்நாடகாவின் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். புயலினால் காணாமல் போகும் மீனவர்களை விரைவில் மீட்டு வர கன்னியாகுமரியில் நிரந்தர ஹெலிகாப்டர் கடற்படைத் தளம் அமைக்கவேண்டும் எனத் தெரிவித்தேன். தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளில் நிதியுதவி தேவைப்படுகிறது என்ரும் கேட்டுக்கொண்டேன். பின்னர், பல்வேறு துறைகளில் நிதி ஆதாரத்தை உருவாக்கி உங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் என பிரதமர் தெரிவித்தார். 

டி.டி.வி.தினகரன் தொலைகாட்சிகளில் ஒரு கருத்தை தெரிவித்தார்.  துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெளிவான விளக்கமான பதிலை அதே ஊடகத்தின் வாயிலாகத் தெரிவித்துவிட்டார். இதில் பேச ஒன்றும் இல்லை. அவரே விளக்கம் அளித்துவிட்டார். ஹைட்ரோகார்பன் போன்ற பிற திட்டங்களில் தமிழக மக்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் அரசு மாநிலத்துக்குள் அனுமதிக்காது. உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.