`மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் அரசியல் இல்லை!’ - ஹெச்.ராஜா | H Raja speaks about CM EPS meeting with PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/10/2018)

கடைசி தொடர்பு:22:16 (08/10/2018)

`மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் அரசியல் இல்லை!’ - ஹெச்.ராஜா

`தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக மக்களின் திட்டங்களுக்காகத்தான், பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்றார். இதில், அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை’ எனக் கும்பகோணத்தில் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

ஹெச்.ராஜா

தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் காவேரி ரத யாத்திரை கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் தொடங்கியது. ரதயாத்திரை ஊர்வலத்தை ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ``தாமிரபரணியில் இந்துக்கள் நடத்தும் புஷ்கர விழாவுக்கு சாமிகள் இல்லை என்று கூறுபவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணியில் புஷ்கரம் நடத்தபோது தி.மு.க-வைச் சேர்ந்த ஆவுடையப்பன் கலந்து கொண்டார். அதற்கான ஆதாரம் உள்ளது. வட இந்தியாவில் கும்பமேளா நடத்துவதுபோல், தாமிரபரணி மகா புஷ்கர விழாவை நடத்த வேண்டும் எனக் கடந்த ஓராண்டாக ஆன்மிக, இந்து அமைப்புகள் கூறி வந்துள்ளன.

முதலில் அறநிலையத்துறை அலுவலகங்கள் அனைத்தும் கோயிலுக்கு வெளியே இருக்க வேண்டும். ஆகம விதிகளுக்கு இவை எதிரானது. ஆகமக விதிகளைப் பற்றிப் பேசும் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, இதற்கு முன் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் 72 கோயில்களின் உற்சவ மூர்த்திகளைக் கொண்டுவந்து கண்காட்சி வைத்தது மட்டும், எப்படி ஆகம விதியாக முடியும். இதற்கு, முதலில் அவர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். இந்துக்கள் வாழ்வியலே சுற்றுச்சூழல் பாதுகாப்பை கொண்டதுதான். கேரளாவில் உள்ள அனைத்துத் தாய்மார்களும் சபரிமலையில் பாரம்பர்ய முறையில் வழிபாடுதான் வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளனர். கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவில் ஆண்களே உள்ளே சென்று வழிபட முடியாத கோயில்கள் 6 உள்ளன. பெண்கள் வழிபட முடியாத கோயில்களும் உள்ளன. இதெல்லாம் அந்தந்த கோயில் வழிபாட்டு உரிமைகள். இவற்றையெல்லாம் மீற முடியுமா’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் அமையுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக மக்களின் திட்டங்களுக்காகத்தான் பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்றார் இதில், அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்.அதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close