வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (09/10/2018)

கடைசி தொடர்பு:12:38 (09/10/2018)

`பத்திரிகைச் சுதந்திரத்துக்குப் பகிரங்க அச்சுறுத்தல்!' - நக்கீரன் கோபால் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைதுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஸ்டாலின்

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த போது அங்கு வந்த 4 பேர் கொண்ட தனிப்படை போலீஸார், அவரை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்தனர். தமிழக ஆளுநரின் துணைச் செயலர் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது சட்டப் பிரிவு 124-ன் கீழ் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிந்தாதிரி பேட்டை காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்வதற்குக் கட்டாயப்படுத்திய வழக்கில், அக்கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி, கடந்த சில மாதங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பாக நக்கீரன் இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானதால், அந்த இதழின் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என நக்கீரன் பத்திரிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கோபால் கைதுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின்., ``பேராசிரியை விவகாரத்தில் கட்டுரை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாஜக அரசும் அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இவரைத்தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ``பத்திரிகை சுதந்திரத்தை நெரிக்கும் செயலில் ஆளுநர் மாளிகை ஈடுபட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது கருத்துரிமைக்கு பேராபத்தாகும். பத்திரிகையாளருக்கு எதிராக ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் வந்திருப்பது இந்தியாவில் வேறெங்கும் நடக்காத ஒன்று. இதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்ப வேண்டும். நக்கீரன் கோபாலை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை விடுவிக்கக் கோரி சிந்தாதிரி பேட்டை காவல்நிலையம் முன்பு பல பத்திரிகையாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.