வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (09/10/2018)

கடைசி தொடர்பு:16:15 (09/10/2018)

`நிர்மலாதேவியால் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்’ - பொன்.ராதாகிருஷ்ணன்

‘நிர்மலா தேவி பற்றிய முழுமையான விஷயம் வெளியில் வந்தால் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும்’ என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை சூளைமேட்டில் இன்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தி.மு.க பத்திரிகைத்துறையைக் கஷ்டப்படுத்துகிறது. இதுபற்றி பேச அவர்களுக்கு உரிமை இல்லை. அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் பா.ஜ.க-வுக்கு இல்லை. எங்களை கேள்விகேட்கும் தி.மு.க முதலில் ராஜபக்‌சேவின் கருத்துக்குப் பதில் கூறட்டும்’ எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நிர்மலா தேவி தொடர்பான முழுமையான விஷயம் வெளியில் வந்தால் தமிழகத்தில் பல அரசியல்வாதிகளில் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகும். அந்த அச்சத்தில்தான் பெரிய சதி செயல் நடக்கிறது. அதன் வெளிபாடுதான் தற்போது நடப்பவை என நான் நினைக்கிறேன். இதில் ஆளுநரைக் குற்றம்சாட்டுவதும் பெரிய சதி செயல். இந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அதற்குள் நீங்கள் எப்படி எழுத முடியும். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது எனக்குத் தெரியாது. அது தொடர்பான கட்டுரையில் என்ன உள்ளது என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நிர்மலா தேவி விவகாரத்தில் பல தவறுகள் நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த விசாரணையில் முடிவில் மிகப்பெரியவர்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வருவார்கள். தற்போது அதைத் தடுக்கவே பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், செய்தியாளர்கள், பா.ஜ.க-வினர் அவதூறாகப் பேசினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அவர், ``அதற்கு நாங்கள் பதில் கூற முடியுமா. அதை நீங்கள் தமிழக அரசிடம்தான் கேட்க வேண்டும். இப்படிதான் செயல்பட வேண்டும் என நாங்கள் யாருக்கும் வழி வகுக்கவில்லை. இது அவர்களின் முடிவு. பா.ஜ.க-வுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாவோ பேசவில்லை என்றால் இங்கு அரசியல் நடக்காது என்ற உயர்வை பா.ஜ.க பெற்றுள்ளது'' என்றார்.