``அ.தி.மு.க-வை எந்தக் கரப்பானாலும் அழிக்க முடியாது!" - அமைச்சர் ஜெயக்குமார் | Jayakumar slams TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (09/10/2018)

கடைசி தொடர்பு:17:16 (09/10/2018)

``அ.தி.மு.க-வை எந்தக் கரப்பானாலும் அழிக்க முடியாது!" - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் ஏற்கெனவே கெட்டபெயர் நிலவும் நிலையில், தினகரனை ரகசியமாக ஓ.பி.எஸ். சந்தித்ததை அவரே ஒப்புக்கொண்டதையடுத்து அவர்மீதான தொண்டர்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது.

``அ.தி.மு.க-வை எந்தக் கரப்பானாலும் அழிக்க முடியாது!

``தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆட்சிக்கு முடிவு கட்டுவேன்" என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான டி.டி.வி.தினகரன் பேசியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து தனி அணியாகச் செயல்பட்டபோது, கடந்த ஆண்டு தன்னைச் சந்தித்ததாகவும், அப்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கவிழ்க்க தன்வசம் உள்ள 11 எம்.எல்.ஏ-க்களும் தினகரனை ஆதரிக்கத் தயார் என்று கூறியதாகவும் இரு தினங்களுக்கு முன் வெடிகுண்டு ஒன்றைப் பற்றவைத்தார் டி.டி.வி.தினகரன். இதனால், ஏற்கெனவே முட்டல் மோதலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி -ஓ.பி.எஸ். இடையேயான நல்லுறவு, மேலும் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. முதலில், தினகரனுடனான சந்திப்பை மறுத்த ஓ.பி.எஸ்., ஒருகட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சந்திப்பை ஒப்புக்கொண்டார். என்றாலும், எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணத்தைத் தினகரன் கொண்டிருந்ததால், சந்திப்பை முடித்துக் கொண்டதாகவும் தன்னிலை விளக்கமளித்தார் ஓ.பி.எஸ். 

ஜெயக்குமார், தினகரன், எடப்பாடி பழனிசாமி

இந்தச் சூழலில், `முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவரின் மாளிகைக்குச் சென்று சந்தித்தது', `டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியது' எனத் தமிழகத்தின் அரசியல் களமும், எடப்பாடி ஆட்சியும் பரபரப்புக்குக் பஞ்சமில்லாமல் தகித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், ``தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மக்கள் விரோத ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவேன்" என்றார். அவர் மேலும், ``அ.தி.மு.க-வில் உள்ள உண்மையான தொண்டர்கள் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் சசிகலாவின் பக்கம்தான் இருக்கிறார்கள். டெல்லிக்கு ஏஜென்டாக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டதால்தான் முதல்வர் பதவிலியிருந்து அவர் விலக்கப்பட்டார். ஆனால், அன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த அவர் உட்பட சிலர் நல்லவர்களாகி விட்டனர். பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததற்குப் பரிசாக எங்களது 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துவிட்டார். தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வினாலும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கேற்ப தீர்ப்பு, எங்கள் பக்கம் சாதகமாகவே வரும். அப்போது இந்த ஆட்சியாளர்களின் ஊழல் உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டுவந்து ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அதன் பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சியை நிலைநாட்டுவோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்தல், தமிழகத்தில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் தொழிற்சாலைகளை உருவாக்குதல், ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை மெய்ப்பித்தல் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சி நடத்துவோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்தெந்த மக்கள் விரோதத் திட்டங்களை எல்லாம் தடை செய்தாரோ... அதைத் தடுக்கக்கூட வழி தெரியாமல் முதுகெலும்பற்ற ஆட்சியாக இப்போதைய ஆட்சி நடந்துகொண்டிருப்பது வேதனையளிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்களே எதிர்பார்க்கிறார்கள்'' என்று கடுமையாகச் சாடியிருந்தார். 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். டி டி வி தினகரன்

" 'தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் ஏற்கெனவே கெட்டபெயர் நிலவும் நிலையில், தினகரனை ரகசியமாக ஓ.பி.எஸ். சந்தித்ததை அவரே ஒப்புக்கொண்டதையடுத்து அவர்மீதான தொண்டர்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது' என அவருடைய ஆதரவாளர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.  அதன் காரணமாகவே, ஓ.பி.எஸ்ஸைத் தவிர்த்துவிட்டு, திடீரென்று டெல்லி சென்று பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் என்றும் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. மேலும் எடப்பாடி உள்பட அமைச்சர்கள் பலரின் மீதும் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. எடப்பாடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிவரும் தினகரன், இப்போது அதற்கான ஆயுதத்தை எடுத்துவிட்டார் என்றே கூறவேண்டும். அதன் ஒருகட்டமாகவே கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்படிப் பேசியிருக்கிறார் தினகரன்" என்கின்கிறனர், அவருடைய ஆதரவாளர்கள். 

தினகரனின் இந்தப் பேச்சுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை அழிக்கப் பலரும் முயன்று, அதில் தோல்வியே அடைந்தனர். ஏன், மறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவராக இருந்தவருமான கருணாநிதியே அ.தி.மு.க-வை அழிக்க எத்தனையோ முறை முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அப்படிப்பட்டவராலேயே அது முடியாமல் போனது. அப்படியிருக்கும் சமயத்தில், சாதாரண கரப்பான் பூச்சியால் எங்கள் இயக்கத்தை எப்படி அழித்துவிட முடியும்? இமயமலையாய் வளர்ந்திருக்கும் எங்கள் கட்சியை எந்தக் கரப்பானாலும் அழிக்க முடியாது" என்றார், புன்னகையுடன். 

டி.டி.வி.தரப்புக்கும், அ.தி.மு.க-வில் ஒரு பிரிவினருக்கும் இடையே மோதல் முற்றத் தொடங்கிவிட்டதையே இதுபோன்ற சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close