வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (09/10/2018)

கடைசி தொடர்பு:17:07 (09/10/2018)

`ஜெயலலிதா எப்படி வைத்திருந்தாரோ, அப்படித்தான்!'- அ.ம.மு.க இணைப்புத் தகவலால் கொதிக்கும் அ.தி.மு.க

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவைவிட 1 சதவிகித வாக்குகளைத்தான் அதிகம் பெற்றிருந்தார் ஜெயலலிதா. தற்போது இடைத்தேர்தலில் 13 சதவிகித வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

`ஜெயலலிதா எப்படி வைத்திருந்தாரோ, அப்படித்தான்!'- அ.ம.மு.க இணைப்புத் தகவலால் கொதிக்கும் அ.தி.மு.க

` அண்ணா தி.மு.கவுடன் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணையும்' என்ற தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. `ஆளுநர் சந்திப்பிலும் இதுகுறித்துப் பேசியதாகச் சொல்கின்றனர். அப்படியொரு முடிவில் எடப்பாடி பழனிசாமி இல்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கடந்த 5-ம் தேதி ஆளுநரை சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பில், `நாடாளுமன்றத் தேர்தலை வலிமையாக எதிர்கொள்ளும் வகையில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒருகட்டமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அ.தி.மு.கவுடன் இணைப்பது குறித்து ஆளுநர் சந்திப்பில் பேசப்பட்டது' எனத் தகவல் வெளியானது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ``தினகரனை அ.தி.மு.கவுக்குள் இணைக்கும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இல்லை. தினகரனைத் தவிர அந்தக் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வார். இதில் அவர் உறுதியாக இருப்பதால்தான், கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா பேனரை அப்புறப்படுத்த வைத்தார். சசிகலா குடும்பத்தினரிடம் ஜெயலலிதா எந்தளவுக்குக் கடுமை காட்டினாரோ, அதே அளவுக்குத்தான் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை, தினகரன் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். 

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி

பன்னீர்செல்வத்தோடு இணைப்பு முயற்சி நடந்தபோது, `அவரை முதல்வராக்குங்கள்' என டெல்லி கூறியபோது, அதை ஏற்க மறுத்தவர் எடப்பாடி பழனிசாமி. இரட்டை இலைக்குக் கையெழுத்திடும் உரிமை, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டது. இதுதொடர்பாக தினகரன் தொடர்ந்த சிவில் வழக்கு அவ்வளவு எளிதில் முடிவுக்கு வரப் போவதில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நீடிக்கும். சிதம்பரத்தின் வழக்கைப் போலவே நீண்டு கொண்டேதான் போகும். தேர்தல் ஆணையத்தின் முடிவை மறுபரிசீலனை செய்வது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. தற்போது முழு அதிகாரமும் எடப்பாடி பழனிசாமி கைகளில்தான் இருக்கிறது. மேலும், தினகரனோடு இணைப்பை நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. எடப்பாடியைப் பொறுத்தவரையில், முதல் எதிரி தி.மு.கதான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவைவிட 1 சதவிகித வாக்குகளைத்தான் அதிகம் பெற்றிருந்தார் ஜெயலலிதா. தற்போது இடைத்தேர்தலில் 13 சதவிகித வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறார் எடப்பாடி. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சசிகலா புஷ்பாவும் கள்ளக்குறிச்சி பிரபுவும்தான் தினகரனிடம் சென்றனர். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு முடிவுக்கு வரும்போது, மற்றவர்களும் இங்கு வந்துவிடுவார்கள்" என்றார் விரிவாக. 

இணைப்பு முயற்சி குறித்துப் பேசும் தினகரன் தரப்பினர், `எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் தினகரன் இருக்க மாட்டார். இணைப்பு முயற்சி குறித்து யாரும் பேசவில்லை' என்கின்றனர்.