Published:Updated:

கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

 கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
 கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்து ஆணையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறதாம். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அரசு எவ்வாறு செயல்படும் என்பதை முன்கூட்டியே ஆலோசித்து எதிர்பார்த்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டுறவுத் தேர்தல்களில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்து ஏற்கனவே அறிக்கை மூலமாக வெளிப்படையாகத் தெரிவித்து விட்டது.

இருந்தாலும் அ.தி.மு.க. அரசு கூட்டுறவுத் தேர்தல்களை ஓரளவிற்காகவாவது முறையாக நடத்த முற்படும் என்று நினைத்து, வேறு சில கட்சிக்காரர்களும், எந்தக் கட்சியையும் சாராதவர்களும் முடிவுக்கு வந்து, இந்தத் தேர்தலில் ஆங்காங்கு போட்டியிடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினால் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைப் பற்றியும், ஆளுங்கட்சியே இந்தக் கூட்டுறவுத் தேர்தலில் ஆங்காங்கு உட்கட்சிப் பூசலால் குடுமிபிடிச் சண்டையில் ஈடுபட்டு வருவதைப் பற்றியும் அன்றாடம் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

கூட்டுறவு சங்க தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் பற்றி பேசுவதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்த காரணத்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளும், புதிய தமிழகம் கட்சியும் அவையிலிருந்து வெளி நடப்புச் செய்திருக்கிறார்கள்.

##~~##
இந்த முறையிலேயே தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகளுக்கு இரண்டு கட்டத் தேர்தல்களை முடித்துவிட்டனர். அந்தத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. அனைத்து விதமான அத்துமீறல் - சட்ட விதிமுறைமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, ஜனநாயகப் படுகொலையை நடத்தி, அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
இந்தக் கூட்டுறவுத் தேர்தல்களை நடத்துவதற்காக அ.தி.மு.க. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. இவ்வளவுக்கும் பிறகு இனியாவது கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் தலையிட்டு, அராஜகமாகவும், சட்ட விரோதமாகவும் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் அனைத்தையும் ரத்து செய்து ஆணையிட வேண்டும்.
ஜனநாயக ரீதியாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய விரும்பும் அனைவரிடமிருந்தும் அவைகளைப் பெற்று, அதன் பிறகு தேர்தல் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்; சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு ஜனநாயகத்திற்கு விரோத செயலில் ஈடுபடும் ஆளுங்கட்சியினர் மீதும், அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் கூட்டுறவுத் தேர்தல் முறையாக நடைபெற்றது என்று நாட்டிற்கு அறிவிக்க இயலும். இதைத்தான் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் இந்தக் கூட்டுறவுத் தேர்தல்களை நடத்தியதில் எந்தவிதமான அர்த்தமும் இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.