வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (10/10/2018)

கடைசி தொடர்பு:19:44 (10/10/2018)

ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக இன்னொரு எம்.எல்.ஏ! அ.தி.மு.க அக்கப்போர்

உச்சகட்ட மோதல்! ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக எடப்பாடியிடம் தஞ்சமடைந்த எம்.எல்.ஏ ஜக்கையன்.

ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக இன்னொரு எம்.எல்.ஏ! அ.தி.மு.க அக்கப்போர்

ம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமடைந்திருப்பதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

எம்.எல்.ஏ. யார் பக்கம்?

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான டி.டி.வி.தினகரன் பக்கம் முதலில் சாய்ந்த ஜக்கையன், அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வராமல், எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆதரவு என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம், தனது மாவட்டத்துக்குள்ளேயே எடப்பாடிக்கு ஆதரவாளர் இருப்பதால், ஜக்கையனை ஆரம்பம் முதலே மிகக் கவனமாக அணுகினார். மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் பெயருக்கு ஓர் அழைப்பு ஜக்கையனுக்குச் சென்றுவிடும். அழைப்பிதழுக்காகவே நிகழ்ச்சிக்கு வந்து தலையைக் காட்டிவிட்டு அமைதியாகச் சென்றுவிடுவார், ஜக்கையன். சில மாதங்கள் இதே நிலை தொடர்ந்துவந்த நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகத் தனது நகர்வைத் தொடங்கியிருக்கிறார் ஜக்கையன். அதன் வெளிப்பாடாகக் கடந்த ஒருவாரமாகத் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற எந்த அரசு விழாக்களிலும் ஜக்கையனைப் பார்க்க முடியவில்லை. குறிப்பாக, எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளும் தரப்பு நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்துக்குக்கூட ஜக்கையன் வரவில்லை.

ஓ.பி.எஸ், ஜக்கையன்

ஏன் இந்தத் திடீர் புறக்கணிப்பு?

``சமீபகாலமாக ஜக்கையன் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லையே" எனக் கம்பம் பகுதியில் உள்ள அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தோம். ``ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியலால்தான் ஜக்கையன், இப்போது எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. `தனது மகன் பாலமணிமார்பனுக்குப் பதவி வேண்டும்' எனக் கேட்டிருக்கிறார், ஜக்கையன். இதற்கு, பல மாதங்களாக அவர் முயற்சி செய்தும் எந்தப் பதிலும் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து வரவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த ஜக்கையன், நேராக எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தேனி மாவட்ட மாணவர் அணி மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கியிருக்கிறார். அன்றிலிருந்துதான் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஜக்கையனுக்கும் பனிப்போர் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது" என்கின்றனர் அவர்கள்.

மேலும் அவர்கள், ``மாவட்டத்துக்குள் மொத்தம் 4 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அதில் இருவர், டி.டி.வி.தினகரன் பக்கம் இருக்கிறார்கள். மீதமுள்ள இரண்டு எம்.எல்.ஏ-க்கள் ஓ.பி.எஸ்ஸும், ஜக்கையனும்தான். இதைப் புரிந்துகொண்டு, ஒற்றுமையாக இருப்பதை விட்டுவிட்டு, `ஜக்கையன் எடப்பாடியின் ஆள்' என்று மனதில் வைத்துத் தொடர்ந்து புறக்கணித்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அரசு விழாக்களில் ஜக்கையனுக்குப் பெரிய அளவில் எந்த மரியாதையும் இருக்காது. அதே நிலைதான் எம்.பி பார்த்திபனுக்கும். நிலைமை இப்படியே சென்றுகொண்டிருந்தபோதுதான் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஜக்கையன் சிலரைப் பரிந்துரைத்தார். ஆனால், அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, தனது ஆதரவாளர் சையதுகானை மாவட்டச் செயலாளராக நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம். இப்படிப் பல புறக்கணிப்புகள் மாவட்டத்தில் நடந்துமுடிந்த நிலையில், பொறுமையின் எல்லைக்கே சென்ற ஜக்கையன், தற்போது ஓ.பன்னீர்செல்வத்தைப் புறக்கணித்துள்ளார்" என்றனர், மிகத் தெளிவாக.

ஜக்கையன் மட்டுமல்ல... அவரது மகனும்: எம் எல் ஏ ஜக்கையன்

மாவட்ட மாணவர் அணி பதவி வாங்கிய ஜக்கையனின் மகன் பாலமணிமார்பன், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை இதுவரை சந்திக்கவில்லை என்கிற தகவலும் ஒருபக்கம் உள்ளது. இந்நிலையில், சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக தேனி முழுவதும் பாலமணிமார்பன் சார்பில் ஒட்டப்பட்டிருத்த போஸ்டர்களில், ஓ.பன்னீர்செல்வம் படம் சிறியதாகவும், எடப்பாடி பழனிசாமியின் படம் பெரியதாகவும் இருந்ததோடு, முதல்வரைப் புகழும் வாசகங்களும் இருந்தன. இந்தச் சம்பவம் தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஜக்கையன் மட்டுமல்லாது அவரது மகனும் ஓ.பன்னீர்செல்வத்தைப் புறக்கணிக்க தொடங்கியுள்ளார். 

இதுதொடர்பாக எம்.எல்.ஏ ஜக்கையனைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை. அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ``அவர் ஒரு வாரமாகச் சென்னையில் இருக்கிறார்" என்று தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் அவர்களிடம் விசாரித்தபோது, ``மாவட்டச் செயலாளர் பதவி நியமனத்தின்போது ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட புறக்கணிப்பைச் சரிசெய்யவே அவர் சென்னையில் முகாமிட்டிருக்கிறார். இன்னும் சில நாள்களில் தேனி மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவியில் அதிரடி மாற்றம் வரலாம். மேலும், சமீபத்தில் மாவட்டம் முழுவதும் நியமிக்கப்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்கள், கம்பம் பிளாக்குக்கு மட்டும் நியமிக்கப்படவில்லை. தனது ஆதரவாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்கு ஜக்கையன் பரிந்துரைத்த காரணத்தால்தான் கம்பத்துக்கு மட்டும் இன்னும் நியமனம் நடக்கவில்லை. அதையும் சரிசெய்துவிட்டுத்தான் தேனிக்கு வருவார்" என்றனர், விரிவாக. 

அ.தி.மு.க-வில் மோதல் தொடங்கிவிட்டது.


டிரெண்டிங் @ விகடன்