என்னை இயக்குவது யார்? - மு.க.ஸ்டாலினை சந்தித்த கருணாஸ் பதில்! | MLA Karunas meet MK Stalin at Gopalapuram

வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (12/10/2018)

கடைசி தொடர்பு:12:29 (12/10/2018)

என்னை இயக்குவது யார்? - மு.க.ஸ்டாலினை சந்தித்த கருணாஸ் பதில்!

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரை இன்று நேரில் சந்தித்துப் பேசினார், எம்.எல்.ஏ., கருணாஸ். 

கருணாஸ்

முதல்வர், காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதற்காகத் தொடரப்பட்ட வழக்கில், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார். பிறகு, பழைய வழக்கில் நெல்லை போலீஸார் அவரைக் கைதுசெய்ய சென்னை வந்தனர். அன்றைய தினம், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், கருணாஸ். 

நான்கு நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு, தற்போது மீண்டும் களத்தில் இறங்கிவிட்டார். இன்று காலை, தி.மு.க தலைவர் ஸ்டாலினை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார் கருணாஸ். 20 நிமிடங்கள் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்படுகிறது. 

ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “என்னைக் கைதுசெய்தது பழிவாங்கும் நடவடிக்கை. ஸ்டாலினோ, தினகரனோ என்னை இயக்கவில்லை. என்னை இயக்குவது ஒருவரே. அது, முத்துராமலிங்கத் தேவர் மட்டுமே. எனது மனதில் பட்ட கருத்துகளை மட்டுமே நான் பேசிவந்தேன். அதற்காகப் பழைய வழக்குகளில் போலீஸார் என்னைக் கைதுசெய்ய முயல்கிறார்கள். எனக்கு எதிராக அநீதி நடக்கிறது. அதற்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும்படி கேட்கவே இங்கு வந்தேன். சபாநாயகர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் எனக் கூறப்படுகிறது. சபாநாயகர் என்பவர், தராசு முள் போன்று எந்தப் பக்கமும் சாயாமல் இருக்க வேண்டும்” எனக் கூறினார். 

அடுத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனையும் நேரில் சந்தித்துள்ளார், கருணாஸ்.


[X] Close

[X] Close