சமூகம்
Published:Updated:

நடராசன் என்னும் மாயமான்!

நடராசன் என்னும் மாயமான்!
பிரீமியம் ஸ்டோரி
News
நடராசன் என்னும் மாயமான்!

நடராசன் என்னும் மாயமான்!

‘புதிய பார்வை’ பத்திரிகை ஆசிரியர் ம.நடராசன் மறைந்தார் என ஜெயா டி.வி தகவல் சொல்கிறது; ‘சசிகலாவின் கணவர் நடராசன் இறந்தார்’ என்கின்றன மற்ற ஊடகங்கள். மார்ச் 20-ம் தேதி அதிகாலை மரணமடைந்த நடராசனின் வாழ்வு முழுக்க, இப்படி ஏராளமான முரண்கள் உண்டு. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தி, அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்ததில் நடராசனின் பங்கு முக்கியமானது. ஆனால், ஜெயலலிதாவின் பெயரால் ஆட்சி செய்யும் அ.தி.மு.க-விலிருந்து யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை; தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி விட்டு, ‘‘தலைவர் கலைஞர்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர் நடராசன்’’ என்று குறிப்பிட்டார். நடராசனின் அரசியல் நடவடிக்கைகளும், நட்பு வட்டாரங்களும் ஒன்றுக்கொன்று தொடர் பில்லாமல் இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு புள்ளியில் அவர் தொடர்புப்படுத்தி வைத்திருப்பார். அ.தி.மு.க-விலும், தமிழக அரசியலிலும், டெல்லி அதிகார மட்டத்திலும் ஒரு மாயமானைப் போல் நடராசன் வலம் வந்தார்.

இந்தி எதிர்ப்புப் போரில் தீவிரம் காட்டி, 1967-ல் தி.மு.க ஆட்சி அமைந்தபோது மக்கள் தொடர்பு அலுவலராகி, பிறகு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைக்கப் பெற்றார் நடராசன். ஒரு கட்டத்தில் சென்னைக்கு வந்த நடராசன்-சசிகலா தம்பதி, வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ கேசட் கடையைத் தொடங்கினர். அதுதான் ஜெயலலிதாவின் ஆலோசகராக நடராசனும், ஜெயலலிதாவின் உதவியாளராக சசிகலாவும் ஆவதற்கான வாய்ப்பைத் தந்தது.

நடராசன் என்னும் மாயமான்!

நடராசனைத் தமிழகம் முழுக்க பாப்புலராக்கிய நாள், 1989 மார்ச் 15. அந்த நாளில், ‘என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்; அரசியலை விட்டு முழுமையாக ஒதுங்குகிறேன்’ என்ற தொனியில் ஜெயலலிதா ராஜினாமா கடிதங்களை எழுதினார். அப்போது, ஊரில் சசிகலா இல்லை. நடராசனுக்கு போயஸ் கார்டனிலிருந்து போன் வந்தது. அழைத்தது ஜெயலலிதாவின் உதவியாளர். அவரும் நடராசன் நியமித்த ஆள்தான். ‘‘மேடம் திடீரென டிரைவரை அழைத்து, ஏழு கடிதங்களைக் கொடுத்துள்ளார். அதில் ஒன்றில் சபாநாயகர் முகவரி இருந்தது; மற்ற ஆறு கடிதங்களில் பத்திரிகை அலுவலகங்களின் முகவரிகள் இருந்தன. கடிதங்களில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை” என்ற தகவலைச் சொன்னார் அவர். ‘இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது’ என்று கணித்த நடராசன், அந்தக் கடிதங்களைக் கைப்பற்றினார். பிரித்துப் படித்துப் பார்த்து அதிர்ந்து போனார். அவற்றைப் பத்திரமாக வீட்டுப் பீரோவில் வைத்துப் பூட்டி விட்டார். விஷயம் தெரிந்து ஜெயலலிதா, ருத்ர தாண்டவம் ஆடினார். அவரை எப்படியோ சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார் நடராசன்.

அதற்குள், உளவுப்பிரிவு விஷயத்தை மோப்பம் பிடித்தது. ஜெயலலிதாவின் கடிதங்களை போலீஸ் எடுத்துக் கொடுக்க, முதல்வர் கருணாநிதி அதை முரசொலியில் பதிப்பித்தார். ஜெயலலிதா ராஜினாமா செய்துவிட்டதாக சபாநாயகர் பேட்டி கொடுத்தார். உடனே ஜெயலலிதாவுக்கு நடராசன் மீது இருந்த கோபம் போய்விட்டது. அது, கருணாநிதியின் மீது திரும்பியது. கைது செய்யப்பட்ட நடராசன், தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

அ.தி.மு.க அணிகள் இணைந்தபின் இரட்டை இலையை டெல்லியில் மீட்டது, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி அமைந்து தி.மு.க ஆட்சி கவிழக் காரணமானது, பிறகு ஜெயலலிதா முதல்வர் ஆனது என எல்லாவற்றிலும் நடராசன் முக்கியமான சூத்திரதாரி.

ஜெயலலிதா முதல்வரான பிறகு, நடராசனால் போயஸ் கார்டனுடன் இணக்கமாக இருக்க முடியவில்லை. ஆனால், சசிகலா குடும்பம்தான் கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்குச் செலுத்தியது. அ.தி.மு.க ஆட்சி இருந்த போதெல்லாம் ‘நடராசன் நினைத்தால் காரியம் நடக்கும்’ எனக் கோட்டை வட்டாரங்களில் பேச்சு இருக்கும். பல நேரங்களில் அவர் நினைத்ததே நடந்தன. ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பமே ஜெயலலிதாவால் முன்னேறி வந்தது. அந்தக் குடும்பமே 1996 தேர்தலில் அ.தி.மு.க-வின் மோசமான தோல்விக்கும் வழிவகுத்தது. ஆனாலும், ஜெயலலிதாவைவிட்டு அந்தக் குடும்பத்தைப் பிரிக்க முடியவில்லை.

ஜெயலலிதாவோடு முடிந்துபோனது நடராசனின் கதை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, போயஸ் கார்டனிலும் சரி... சசிகலா குடும்பத்திலும் சரி... நடராசனின் பேச்சு எடுபடவில்லை. சசிகலாவைக் கட்சியின் பொதுச் செயலாள ராக்க முடிவு செய்தபோது, அதில் நடராசனுக்கு உடன் பாடில்லை. அதுபோல, ‘ஓ.பி.எஸ் தலைமையில் ஆட்சி நடக்கட்டும்’ என்பது நடராசனின் கணக்கு. அதனால்தான், 2017-ல் தஞ்சையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், “ஓ.பி.எஸ் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அதனால், முதலமைச்சரை மாற்றத் தேவையில்லை” என்று பேட்டி கொடுத்தார். ஆனால், அதைத் தினகரனும், சசிகலாவும் கேட்க வில்லை. பிறகு, சசிகலாவை முதல்வராக்க நடந்த முயற்சிகளையும் நடராசன் தடுத்தார். ஆனால், நடராசனின் எச்சரிக்கையைக் குடும்பம் கேட்கவில்லை.

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றபோது, நடராசன் வருத்தப்பட்டுக் கண் கலங்கினார். தினகரன் முதல் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வரை நடராசனை எதிர்த்துப் பேச ஆரம்பித்தனர். ‘அனைவருக்கும் ஆதாரம் நடராசன்’ என்பதையே குடும்பம் மறக்கத் தொடங்கியது. ஒதுங்கித் தனிமையில், பெசன்ட் நகர் வீட்டில் இருந்த நடராசனின் உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்டது.

நேரடி அரசியலில் இல்லாமல், தமிழக அரசியலின் போக்கை நடராசன் ஏதோ ஒருவகையில் தீர்மானித்துக்கொண்டே இருந்தார். நன்மையும் தீமையும் கலந்து இருந்த அந்த மாய அரசியலைச் செய்தவற்கு இனி நடராசனைப்போல் ஒருவர் இல்லை!

- ஜோ.ஸ்டாலின்