வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (13/10/2018)

கடைசி தொடர்பு:14:53 (13/10/2018)

`பணம் வசூலிக்க உத்தரவிட்டீங்களா; எனக்குத் தெரிஞ்சாகணும்!' - கிரண் பேடிக்கு நாராயணசாமி கேள்வி

”ஆளுநர் அலுவலகமே ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறது” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடியாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி மாநிலத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதிகோரி அனுப்பப்பட்ட கோப்புக்கு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதிகளைப் பெறுவதற்கு அரசின் சார்பில் சி.எஸ்.ஆர் (Corporate Social Responsibility) குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு நான்தான் தலைவர். புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் அரசு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கும், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டுவதற்காகவும் பல வங்கிகளும், தொண்டு நிறுவனங்களும் நிதிகளை வழங்கியிருக்கிறார்கள். அந்த நிதிகளை சி.எஸ்.ஆர் கமிட்டி மூலமாகப் பெற்று, துறைவாரியான திட்டங்களுக்காக நிதிகளை வழங்கிவருகிறோம்.

சி.எஸ்.ஆர் நிதி தொடர்பாக விதிகளும், அதற்கென்று தனியாகத் தலைவரும் இருக்கும்போது, ஆளுநர் மாளிகையில் இருந்து தனியார் நிறுவனங்கள், ரோட்டரி கிளப்புகள் உள்ளிட்டவைகளைத் தொடர்புகொண்டு, சி.எஸ்.ஆர் நிதி என்ற பெயரில் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. எனக்குக் கிடைத்திருக்கும் தகவல்படி, இதுவரை 85 லட்ச ரூபாய் பணத்தை வசூல்செய்திருக்கிறார்கள். யார், யாரிடமிருந்து எவ்வளவு நிதி வசூல் செய்யப்பட்டது என்ற விவரம் இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. எதற்கெடுத்தாலும், வெளிப்படையான நிர்வாகம், ஊழலில்லாத நிர்வாகம் என்று கூறுகிறவர் ஆளுநர் கிரண் பேடி. இவர்கள் வசூலித்த நிதியை சி.எஸ்.ஆர் கமிட்டிக்குத்தான் அனுப்ப வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகைக்கு செலவுசெய்ய அதிகாரம் இல்லை. ஆளுநர் அலுவலகத்தின் பெயரைச் சொல்லி பலர் சி.எஸ்.ஆர் நிதியை வசூல்செய்திருக்கிறார்கள். ஆளுநர்  அலுவலகமே ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறது. தனி நபர் அல்லது ஒரு நிறுவனம், நிதி கொடுப்பதற்காக ஆளிநர் மாளிகையை அணுகினால், அவர்களை சி.எஸ்.ஆர் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். தன்னிச்சையாக அந்த நிதியைச் செலவு செய்தவற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. அதிகாரம் இல்லாமல் ஆளுநர் சி.எஸ்.ஆர் நிதியை வசூல்செய்துள்ளார்.

கிரண் பேடி

இதுதொடர்பாக யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள், எவ்வளவு செலவு செய்யப்பட்டது, எதற்குச் செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தை ஆளுநர் கிரண் பேடி, சிஎஸ்ஆர் கமிட்டிக்கு அளிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் விதிமுறையைப் பற்றி பேசும் ஆளுநர் கிரண் பேடி, சி.எஸ்.ஆர் கமிட்டி குறித்த விதிமுறையை மறந்ததற்கு என்ன காரணம். இது தொடர்பாகப் பலர் என்னை நேரில் புகார் அளித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி பணம் வசூலிக்கச் சொல்லி ஆளுநர் மாளிகையில் இருக்கும் அதிகாரிகளுக்கு கிரண் பேடி எதுவும் உத்தரவு பிறப்பித்தாரா என்பது தெரிய வேண்டும். இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடி உரிய பதிலை அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். பலர் என்னிடம் நேரடியாக வந்து, ஆளுநர் மாளிகை மூலம் தொலைபேசியில் சி.எஸ்.ஆர் நிதி கேட்டு தொந்தரவு கொடுப்பதாகப் புகார் அளிக்கின்றனர். இவ்வாறு பணம் வசூலிக்கும்படி, ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆளுநர் ஏதாவது உத்தரவிட்டாரா என்பது தெரிய வேண்டும். இதற்கு, ஆளுநர் உரிய பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க