வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (14/10/2018)

கடைசி தொடர்பு:10:40 (14/10/2018)

பகுஜன் சமாஜையடுத்து தி.மு.க-வும் விலகலா? சறுக்கலைச் சந்திக்கிறதா காங்கிரஸ்?

''மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி தனித்துப் போட்டியிடும்'' என்று அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்ததால், காங்கிரஸ் - பகுஜன் சமாஜுக்கு இடையே இருந்த கூட்டணி சுமுக உறவில், திடீரென்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜையடுத்து தி.மு.க-வும் விலகலா? சறுக்கலைச் சந்திக்கிறதா காங்கிரஸ்?

'வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைத்து, அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும்' எனக் கனவு கண்டுகொண்டிருந்த காங்கிரஸ், தற்போது ஐந்து மாநிலங்களில் (சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா) நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தல்களால் கலக்கத்தில் இருக்கிறது. 

காங்கிரஸ் கட்சியினருடன் மாயாவதி

அதற்குக் காரணம், பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதியின் 'திடீர்' அறிவிப்புதான். ''மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி தனித்துப் போட்டியிடும்'' என்று அவர் அறிவித்ததால், காங்கிரஸ் - பகுஜன் சமாஜுக்கு இடையே இருந்த கூட்டணி சுமுக உறவில், திடீரென்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாயாவதி கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் என்.மகேஷ், திடீரென பதவியை ராஜினாமா செய்திருப்பதும் காங்கிரஸுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, "மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தனித்துப் போட்டியிடுகிறோம். காங்கிரஸுடன் கூட்டணி இல்லை. பகுஜன் சமாஜுக்குச் சில இடங்களை மட்டும் கொடுத்துவிட்டுக் காங்கிரஸ் எங்களை அழிக்கத் திட்டமிடுகிறது. எப்போதெல்லாம் நாங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோமோ, அப்போதெல்லாம், எங்கள் வாக்குகள் காங்கிரஸுக்குச் செல்கின்றன. பி.ஜே.பி-யை அழிக்கிறோம் என்ற பெயரில் பி.எஸ்.பி. போன்ற சிறிய கட்சிகளைத் துடைத்தெறிய காங்கிரஸ் கட்சி முயல்கிறது. அந்தக் கட்சி அகங்காரத்துடன் செயல்படுகிறது; மோசமான நிலையில் இருக்கிறது; குஜராத்தைப்போல நெருக்கடி தர நினைக்கிறது. அதே நேரத்தில் இந்தத் தனித்து நிற்கும் முடிவு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது எங்கள் முடிவை அறிவிப்போம்" என்று கூறியிருந்தார். 

மாயாவதியின் இந்த அறிவிப்பால் காங்கிரஸ் மட்டுமல்ல... மற்ற கூட்டணிக் கட்சிகளுமே கலக்கத்தில் உள்ளன. குறிப்பாக, காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க-வுக்கே சற்றுக் கலக்கத்தைத் தந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "காங்கிரஸ் - தி.மு.க.  கூட்டணி என்பது 100 சதவிகிதம் உறுதியாகிவிட்டது. மற்ற கட்சிகளைச் சேர்ப்பது குறித்து தி.மு.க. முடிவெடுக்கும். ஆனால், காங்கிரஸைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளைத் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியே பெறவேண்டும். அதுதான் எங்கள் இலக்கு" என்று தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாகச் செல்வதே தி.மு.க-வுக்கும் நல்லது என்று பேசப்படுகிறது. எது எப்படியிருந்தாலும், தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரிய வரும். ஆனாலும், அதற்குள்ளேயே அவ்விரு கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசப்படுவதாகத் தகவல் எழுந்துள்ளது. 

ஸ்டாலின், ராகுல் காந்தி

"இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்குக் குறைந்த தொகுதிகள் மட்டும் ஒதுக்கினால் போதும். அதாவது, ஒற்றை இலக்கத்தில் மட்டும் கொடுத்தால் போதும். ஏனெனில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினோம். ஆனாலும், குறைந்த அளவிலேயே அவர்கள் வெற்றிபெற்றனர். அதனால்தான் நம்மால் ஆட்சியமைக்க முடியாமல் போனது. இதையே நம் கட்சியினருக்குக் கூடுதலாகக் கொடுத்திருந்தால் வெற்றிபெற்றிருக்க முடியும். ஆகவே, அந்தத் தவற்றையே இந்த முறையும் செய்ய வேண்டாம். மேலும், காங்கிரஸ் கட்சி தற்போது வலிமையுடன் இல்லை. இதையெல்லாம் நாம் நன்கு யோசிக்க வேண்டும்" என தி.மு.க. தலைமையிடம் அக்கட்சியைச் சேர்ந்த சிலர் ஆலோசனை தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து தி.மு.க.-வைச் சேர்ந்த சிலர், டெல்லியில் காங்கிரஸ் தலைமையைச் சந்தித்து, "தி.மு.க. எப்போதும் காங்கிரஸுக்குப் பக்கபலமாக இருக்கும். அதனால், காங்கிரஸ் பயப்படத் தேவையில்லை. ஆதலால், தொகுதிகளின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வெற்றி ஒன்றுதான் நமது குறிக்கோள். தொகுதி எண்ணிக்கையைக் காட்டிலும் எதிரியை வீழ்த்துவதற்குத்தான் நாம் முயலவேண்டும். அதோடு, தற்போது மாநிலத்தில் தி.மு.க-வுக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஓட்டுவங்கி, உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை வைத்துப் பார்க்கும்போது வருகிற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. வெற்றிபெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே,  நமக்குள் கூட்டணியை மட்டும் முதலில் உறுதிசெய்து கொள்வோம்" என்று தெரிவித்துள்ளனர். 

இதைக் கேட்டுக் காங்கிரஸ் சற்றே அதிர்ச்சியடைந்தாலும், உடனடியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதேநேரத்தில், "ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களால், சில கட்சிகள் நம் கூட்டணியிலிருந்து விலகியிருக்கின்றன. நமக்கு இப்போது நெருக்கடியான சூழ்நிலை நிலவுவதால் நாம் பொறுத்திருக்க வேண்டும். ஆதலால், தமிழகத்தில் வலுவாக இருக்கும் தி.மு.க.-வையும் தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னையால் இழந்துவிடக்கூடாது. இதனால் நமக்குத்தான் அதிக பாதிப்பு வரும். ஆகவே, தி.மு.க-வுடன் கூட்டணியில் நீடிப்பதோடு அது தரும் தொகுதிகளிலேயே போட்டியிடலாம். மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

காங்கிரஸுக்குச் சறுக்கல் ஆரம்பித்துவிட்டதா?  

நீங்க எப்படி பீல் பண்றீங்க