Published:Updated:

`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது!’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்

பிரேம் குமார் எஸ்.கே.
`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது!’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்
`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது!’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்

'இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  தா.பாண்டியன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலைசெய்யும் கோப்பில் உடனடையாகக் கையெழுத்து இட வேண்டும்' என தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டார். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் கைதுசெய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் விடுதலை தொடர்பான முக்கிய வழக்கில் தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்குக் பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. இதன்படி, தமிழக அரசு அமைச்சரவையைக்  கூட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைசெய்ய முடிவுசெய்து, ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. ஆளுநர் பன்வாரிலாலின்  முடிவுக்காக அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  தா.பாண்டியன், ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியின் உரையைத் தமிழ் மொழிப்பெயர்ப்பவராகக் கலந்துகொண்டார். அந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சையும் பெற்ற தா.பாண்டியன் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,``முன்னாள் பிரதமர் கொல்லப்பட்ட அந்த இடத்தில் நானும் இருந்தேன். இந்த வழக்கில், நானும் ஒரு சாட்சிக்காரன். அந்த சம்பவத்தில் நான்  மிகவும் பாதிக்கப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வர வெகுகாலம் ஆனது.

சுதந்திர இந்தியாவில், இந்த வழக்கு மிக முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வழக்கின் தன்மை காரணமாகப் பலர் இதனுள் கொண்டுவரப்பட்டனர். இந்தக் கொலை சம்பவத்துக்கு என்று தெரியாமல் உதவிய சிலரும் இந்த வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டனர்.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தற்போது சிறையில் இருக்கும் பேரறிவாளன், குண்டுவெடிப்புக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான தாமஸ், பேரறிவாளனை அப்பாவி என்று குறிப்பிட்டுள்ளார். பேரறிவாளன் குடும்பத்தை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும்.பேரறிவாளன் பட்டம் பெற்றவர்.  அவரது தந்தை ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். என்.சி.சி மூலம் பல நல்ல மாணவர்களை உருவாக்கியவர். பேரறிவாளனின் அம்மா, தனது மகனுக்காகக் கடந்த 28 வருடங்களாகக் காத்திருக்கிறார். 

பேரறிவாளன் மீது வேறு எந்தக் குற்ற வழக்கும் கிடையாது. சிறையில் இருக்கும் அப்பாவிகளின் விடுதலை உங்கள் கையெழுத்தில்தான் இருக்கிறது. கடந்த 28 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளனர். இது, ஆயுள் தண்டனையைவிட அதிகம். அதனால், மனிதாபிமான அடிப்படையில், மீதம் இருக்கும் நாள்களில் அவர்களை சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.