Published:Updated:

``ஓவியாவுக்குப் போட்ட ஓட்டு உங்களுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?" அன்புமணியிடம் கேட்ட மாணவர்

வீ கே.ரமேஷ்
``ஓவியாவுக்குப் போட்ட ஓட்டு உங்களுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?" அன்புமணியிடம் கேட்ட மாணவர்
``ஓவியாவுக்குப் போட்ட ஓட்டு உங்களுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?" அன்புமணியிடம் கேட்ட மாணவர்

`இளைஞர்களே வாருங்கள்... அன்புமணியைக் கேள்வி கேளுங்கள்' என்ற நிகழ்ச்சி, சேலம் ரெட்டிப்பட்டியில் உள்ள எம்.எஸ்.வி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பா.ம.க இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

முன்னதாக மாணவர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், ``அரேபியப் புரட்சியில் 18 நாள்களிலேயே மாற்றம் நிகழ்ந்ததைப்போல மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு 3 வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் உத்தரப் பிரதேசமும், 2வது இடத்தில் பஞ்சாப்பும், 3வது இடத்தில் தமிழ்நாடும் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்'' என்றவர், ``பெண்களுக்கே முன்னுரிமை என்பதால் முதல் கேள்வி பெண்களே கேட்கட்டும்'' என்று தண்ணீர் குடித்துவிட்டு கேள்விகளுக்குத் தயாரானார்.

``எங்கள் கல்விமுறை சரியில்லை; நாங்கள் புரிந்து படிப்பதில்லை; புரியாமல் படிக்கிறோம். அதில், நீங்கள் மாற்றம்கொண்டு வருவீர்களா?"

``தற்போது இருக்கும் கல்விமுறை புரிந்து படிப்பதில்லை. புரியாமல் படித்து தேர்வில் வாந்தி எடுக்கிறோம். கல்விமுறையும் அப்படித்தான் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அறிவுசார்ந்த, திறன்சார்ந்த, தொழில்சார்ந்த கல்வியை உருவாக்கிப் புரிந்து படிக்கக்கூடிய வகையில் அதைத் தருவோம். ஒவ்வொருவருடைய திறமையை வெளிக்கொண்டு வரும் இடமாகக் கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும்".

``நேரத்தைச் சிறந்த முறையில் கையாளுகிறீர்கள்... எப்போது நீங்கள் முதல்வர் ஆவீர்கள்?"

``நீங்கள் முடிவுசெய்தால் சீக்கிரத்தில் வரும். என் நோக்கம் முதல்வர் ஆக வேண்டும் என்பதல்ல... இந்தத் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்; முன்னேற்ற வேண்டும். நான் உலகில் 70 நாடுகளுக்கு மேல் சென்றுவந்திருக்கிறேன். அமெரிக்காவில் விபத்து ஏற்பட்டு 911 எண்ணுக்கு அழைத்தால், 2 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரும். அதைப் பார்த்துதான், நான் மத்திய அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்தேன். தற்போது இந்தியாவில் 22 மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக 25,000 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. நாங்கள் இதை விபத்துகளுக்காகக் கொண்டுவந்தோம். ஆனால், அதில் 24 சதவிகித அழைப்புகள் மகப்பேற்றுக்காகவே அழைக்கப்பட்டவை. 21 சதவிகிதம் பேர் மட்டுமே விபத்துக்காக அழைத்தார்கள்".

``ஓவியாவுக்குப் போட்ட ஓட்டு உங்களுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?" அன்புமணியிடம் கேட்ட மாணவர்

``அரசியல்வாதி என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறர்கள். சிறந்த அரசியல்வாதியாக நாங்கள் யாரை நம்புவது..? பொதுமக்களாக இருந்து பதலளியுங்கள்?"

``சினிமாவில் அரசியல்வாதியை ஊழல்வாதியாகவும், ரவுடியாகவும், கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடியவராகவும் காட்டிவருகின்றனர். சிறந்த அரசியல்வாதி மக்களை, தொண்டர்களை, கட்சிக்காரர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்காகப் போராடக்கூடியவராக இருக்க வேண்டும். சிறந்த அரசியல்வாதி அடுத்த தேர்தலைச் சிந்திக்கக்கூடியவராக இருக்கக் கூடாது. அடுத்த தலைமுறையைச் சிந்திக்கக்கூடியவராக இருக்க வேண்டும். தற்போது உங்களிடம் சில சினிமாக்காரர்கள் வருகிறார்கள். சினிமாவுக்கு நான் எதிரி அல்ல... நான் வாராவாரம் சினிமா பார்ப்பேன். என் அப்பா பார்ப்பார், அம்மா பார்ப்பார். சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அது பொழுதுபோக்காக இருக்க வேண்டும்".

``நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு சாத்தியமா?"

``நிச்சயமாக மதுவை ஒழிப்போம். என் முதல் கையொப்பமும் மதுவுக்கு எதிரானதாக இருக்கும்".

``லஞ்சம் எப்போது மாறும். அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருகிறார்கள். பிறகு, எதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள். எங்கள் தலைமுறையிலாவது லஞ்சம் ஒழிக்கப்படுமா?"

``மாற்றம் ஒன்றே ஒரே வழி. ஒரு மாற்றத்தைக் கொடுத்தால் நாங்கள் சேவை உரிமைச் சட்டம் கொண்டுவருவோம். அதன்படி, அனைத்து அலுவலகங்களிலும் ஆன்லைன் சேவையை உருவாக்குவோம். உதாரணத்துக்கு உங்கள் குழந்தைக்கு பர்த் டே சர்டிஃபிகேட் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். 15 நாள்களுக்குள் சர்டிஃபிகேட் கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், 16-வது நாளிலிருந்து 100 ரூபாய் அபராதம் விதிப்போம்; 10,000 ரூபாய் வரை அபராதம் விதிப்போம். பிறகு பணியிடை நீக்கம் செய்வோம். இதன்மூலம் 70 சதவிகிதம் ஊழல் ஒழியும்".

``நான் பொறியியல் படிக்கிறேன்... என் படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லையே?"

``என் தொகுதிக்கு நான் ஒருமுறை சென்றிருந்தபோது, என்னைப் பார்ப்பதற்காகக் காட்டிலிருந்து 4 பேர் ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்து, `என்ன படித்திருக்கிறீர்கள்' என்றேன். அதில் 3 பேர், `பொறியியல் படித்திருக்கிறேன்' என்றார்கள். அதேபோல ஒரு திருமணத்துக்குச் சென்றேன். அங்கு சமையல் செய்தவர்கள் அனைவரும் பொறியியல் மாணவர்கள். வேலை கிடைக்காததால் இந்தத் தொழில் செய்வதாகச் சொன்னார்கள்.

இதற்கு யார் காரணம்? இந்தியாவில் 40 சதவிகிதம் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. வருடம் 2 லட்சம் பேர் அதன்மூலம் படித்து வெளியே வருகிறார்கள். அதில், 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்போம்".

``பெண்கள் மீதான பாலியல் கொடுமை இந்தச் சமுதாயத்தில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறியிருக்கிறாரே?"

``#MeToo மூலம் பிரபலங்கள் கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். இப்போது பெண்களுக்குத் தைரியம் வந்திருக்கிறது. வரவேற்கிறோம். ஒருகட்டத்தில் நடந்துள்ளதை வெளியில் சொல்ல முடியவில்லை. இப்போது சொல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. யாராக இருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரமுத்து, தமிழுக்குத் தொண்டாற்றியிருக்கிறார். அவர்மீது ஒரு புகார் வந்திருக்கிறது. விசாரிக்க வேண்டும்".

``நீங்கள் முதல்வரானால், வருங்கால இளைஞர்களுக்கு என்ன செய்வீர்கள்?"

``முக்கியமாக, முதல் கையொப்பம் மதுவுக்கு எதிராக இருக்கும். இளைஞர்கள் என் அமைச்சரவையில் 50 சதவிகிதத்துக்கும் குறையாமல் இருப்பார்கள். சுகாதாரத் துறைக்கு மருத்துவரை நியமிப்பேன். நீதித்துறைக்கு வழக்கறிஞர்களை நியமிப்பேன். விவசாயத் துறைக்கு விவசாயிகளை நியமிப்பேன்".

``நீங்கள் முதல் கையெழுத்தை மதுவிலக்குக்குப் போட்டால் நாட்டில் வருமானம் இல்லாமல் போய்விடுமே?"

``மதுவினால் தமிழகத்துக்கு 36,000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால், இழப்பு 1,30,000 ரூபாய் ஏற்படுகிறது. மணல், தாதுமணல் உள்ளிட்டவற்றில் வரி வசூலை அதிகப்படுத்தி 1,10,000 கோடி ரூபாய் புதிய வருமானத்தைக் கொண்டுவருவோம்".

``உங்களுடைய ரோல் மாடல்?"

``என் தந்தைதான் எனக்கு ரோல் மாடல்".

``ஓவியாவுக்குப் போட்ட ஓட்டு உங்களுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?" அன்புமணியிடம் கேட்ட மாணவர்

``ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதேன்? மக்கள் பிரதிநிதிக்குக் கல்வி தேவையா? கல்லூரிகளில் தமிழ் வழியில் படிக்கத் தமிழுக்குத் தகுதி இல்லையா?"

``ஒரு காலத்தில் பெண்கள் வெளியில் வரக் கூடாது, ஓட்டுப் போடக் கூடாது. படிக்கக் கூடாது, வேலைக்குப் போகக் கூடாது என்று இருந்தது. அவை எல்லாம் தற்போது மாறி இருக்கிறது. பெண்களுக்குச் சம உரிமை அல்ல, முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். கல்வித் தந்தை காமராசர் படிக்காதவர். ஆனால் மதிய உணவுத் திட்டம், கல்லூரிகள், அணைகள், சேலத்தில் இரும்பாலை, திருச்சியில் பி.ஹெச்.இ.எல். போன்ற தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தவர். என்னைப் பொறுத்தவரை கல்வி தேவை. ஆனால், கட்டாயமாக இருக்கக் கூடாது.

தாய்மொழியில் படித்தவர்கள்தான் பலர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம். ஆனால், அனைவரும் ஆங்கிலத்தில் பேசுகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் அழிந்துவிடும் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால், நாங்கள் அழியவிட மாட்டோம். உலகத்தில் மூத்த மொழி தமிழ். கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தாய்மொழி படித்தால் மட்டுமே உயர் கல்வி படிக்க முடியும். தமிழகத்தில் தாய்மொழி படிக்காமலேயே உயர் கல்விக்குப் போகலாம்".

``நடிகை ஓவியாவுக்குக் கிடைத்த ஓட்டு, உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?"

``ஓவியாவுக்கு ஓட்டுப் போட்டதால் பிக்பாஸில் ஜெயித்தார். எனக்கு ஓட்டுப் போட்டிருந்தால் நீங்கள் ஜெயித்திருப்பீர்கள்".

``நீங்கள் ஆட்சிக்கு வந்தால் பிளாஸ்டிக்கை ஒழிக்க என்ன செய்வீர்கள்?"

``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது மறு உருவாக்கம் செய்ய முடியாத பிளாஸ்டிக்கை ஒழிக்க ஆணையிட்டார். வரும் ஜனவரி முதல் நாளிலிருந்து மறுவுருவாக்கம் செய்ய முடியாத ஹேரி பேக்களுக்குத் தடை என்று கூறியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. பிளாஸ்டிக்கால் கடலில் உள்ள திமிங்கலம், டால்மின் போன்றவை இறக்கின்றன. வீட்டில் பால்தரும் கறவை மாடுகளும் சாகின்றன. பிளாஸ்டிக்கால் புற்றுநோய் வருகிறது. நீங்களும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது".

``உங்கள் கட்சிக்காரர்கள் தவறு செய்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் கட்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே இருக்கிறார்களே? வருங்காலத்தில் வேளாண் கல்லூரிகளை அதிகப்படுத்துவீர்களா?"

``யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம். எங்கள் கட்சிக்காரர்கள் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். எங்கள் கட்சியில் அனைத்துச் சமுதாயத்தினரும் இருக்கிறார்கள். நிச்சயமாக, வேளாண் கல்லூரிகளை அதிகப்படுத்துவோம்".

``கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு தடுக்கிறதா?"

``மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. நம் அரசாங்கமே வரலாற்று ஆய்வாளர்களை வைத்து ஆய்வு செய்யலாம்".

``மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உங்கள் எழுச்சி உரையைக் கேட்டு வருகிறார்கள். ஆனாலும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது. அதைவிட இழிவுப்படுத்தி மனம் புண்படுத்துகிறார்களே?"

``நீங்கள் தவறாகப் பேசுகிறீர்கள். இப்போது யாரும் மாற்றுச் சமுதாயத்தினரைத் தவறாகப் பேசுவதில்லை. முன்பு சொல்லி இருக்கலாம். எங்கள் கட்சியிலும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. நாங்கள் மாறியிருக்கிறோம். சாதி, மதம், மாநிலம் கடந்த கட்சியாக இருக்கிறோம்".

`` `சாதி, மதம் இல்லை' என்கிறீர்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே ஸ்காலர்ஷீப் கொடுக்கிறார்களே?"

``இன்று நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், 100 ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் 1,000 ஆண்டுகளாக இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. நிச்சயம், அவர்களுக்கு ஸ்காலர்ஷீப் கொடுக்கவேண்டும். சமூக நீதி அனைவருக்கும் அடைகிறபோது சாதி ஒழியும். சாதி ஒழிக்கப்படக்கூடியது. படிப்பில், வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால் சாதி ஒழியும்".

``உங்கள் கருத்துகள் நன்றாக இருக்கிறது. ஏன் பத்திரிகைகளில் ஊடகங்களில் அவற்றை காட்டுவதில்லை?"

``பல ஊடகங்கள் தி.மு.க., அ.தி.மு.க. சார்ந்து இருக்கின்றன. செய்தி வெளியிட்டால், மக்கள் மனதில் இடம்பிடித்து விடுவார்கள் என்பதால் காட்டுவதில்லை. நிச்சயம் ஒருநாள் அனைத்து ஊடகங்களும் நம்மைக் காட்டுவார்கள்".