Published:Updated:

நாள் குறிச்சாச்சு?

வேகம் எடுக்கும் ஸ்டாலின் கைதுப் படலம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

வீடு அபகரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், போலீஸ் வளையத்துக்குள் வரும் நேரம் நெருங்குகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடந்து வருகின்றன.   

'சென்னை ஆழ்வார்​பேட்டை சித்தரஞ்சன் சாலையில் வசிக்கும் ஸ்டாலின், தனது வீட்டை அபகரித்துக்கொண்டார்’ என்று கடந்த மாதம் 29-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷ னரிடம் மனு கொடுத்தார் சேஷாத்ரி குமார். இதையடுத்து, ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, ஸ்டாலினின் நண்பர்கள் ராஜாசங்கர், வேணுகோபால் ரெட்டி, சீனிவாசன், சுப்பாரெட்டி,  ஆகியோர் மீது, டிசம்பர் 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உடனே, ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகத்துக்கே போய், 'விசாரணைக்குத் தயார்’ என்று பரபரப்பு கிளப்பினார். உதயநிதி, ராஜா சங்கர் இருவரும் முன் ஜாமீன் பெற்றனர்.

நாள் குறிச்சாச்சு?

இந்த வழக்கு இப்போது வேகம் எடுத்திருக்கிறது என்று சொல்லும் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர், ''வழக்குக்குத் தேவையான ஆவணங்களையும் ஆதாரங்களையும்  மத்தியக் குற்றப்பிரிவு சேகரித்து உள்ளது. சேஷாத்ரி குமாரின் வீட்டுக்கே சென்று, அவருடைய மனைவி மற்றும் மகளிடம் இருந்து அந்த வீட்டை, குமார் பெயருக்கு 'பவர்’ பதிவு செய்ததாகக் கூறப்படும் திருவல்லிக்கேணி சார்பதிவாளர் பால்பாண்டியன் மற்றும் பத்திரப் பதிவுத்துறை டி.ஐ.ஜி. ஹரிஹரன் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சேஷாத்ரி குமாரின் வீட்டுக்கே சென்று 'பவர்’ பத்திரத்தைப் பதிவு செய்யுமாறு, ஹரிஹரன் உத்தரவு இட்டதாக சார்பதிவாளர் பால்பாண்டியன் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். துணை முதல்வருக்காக இந்தச் சொத்து வாங்குவதாகவும், அதனால் தேவையான உதவிகளைச் செய்யும்படி உயர் அதிகாரிகளிடம் இருந்து தனக்கு உத்தரவு வந்ததாக ஹரிஹரனும் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் வலுவான சாட்சிகள் என்பதால், அவர்கள் 164-வது பிரிவின் கீழ், மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

புகார்தாரர் சேஷாத்ரி குமார், சார்-பதிவாளர் பால்பாண்டியன் ஆகிய இருவரும், சைதாப்பேட்டை 23-வது மாஜிஸ்திரேட் முன்பு, கடந்த புதன்கிழமை மதியம் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டு, வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள். அதனால், அவர்களால் பல்டி அடிக்க முடியாது. இதன் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.

வாக்குமூலம் கொடுத்தது உண்மையா என்று பத்திரப் பதிவுத்துறை டி.ஐ.ஜி. ஹரிஹரனிடம் பேசினோம். ''மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் இருந்து எனக்கு சம்மன் வந்தது. நான் ஆஜர் ஆனதும், உதவி கமிஷனர் விசாரித்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கூறினேன். அதைப் பதிவு செய்துகொண்டார்கள். மற்றபடி, மாஜிஸ்திரேட் முன்பு நான் வாக்குமூலம் கொடுக்கவில்லை'' என்றார்.

சேஷாத்ரி குமார் மாஜிஸ்தி​ரேட்டிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'பெற்றோர் நினைவாக வைத்திருந்த அந்த வீட்டை விற்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை’ என்று தெளிவாகக் கூறியுள்ளார். மேலும், இடத்தைக் கேட்டு மிரட்டியது உண்மைதான் என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்துள்ளார். தேதி வாரியாக தன் வீட்டுக்கு வந்தவர்கள், போனில் மிரட்டியவர்கள், வீட்டில் குடியிருந்தவர்களை மிரட்டி விரட்டியவர்கள் என்று முழுமையான பட்டியலையும் இவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்து இருக்கிறாராம்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும்போது, 'போலீஸ் மிரட்டி வாக்குமூலம் வாங்கியது’ என்று தடம் புரண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளிக்க மத்தியக் குற்றப் பிரிவு ஏற்பாடு செய்ததாம். 'நாள் குறிச்சாச்சு’ என்று கண் சிமிட்டுகிறார் ஓர் உயர் போலீஸ் அதிகாரி.

கைதுக்குத் தயார் என்றுதான் ஸ்டாலினும் சொல்லி இருக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!  

- எஸ். கோபாலகிருஷ்ணன், படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு