Published:Updated:

`காவிரியைப் பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்க்க புதிய திட்டம்!’ - கொதிக்கும் பெ.மணியரசன்

கு. ராமகிருஷ்ணன்
`காவிரியைப் பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்க்க புதிய திட்டம்!’ - கொதிக்கும் பெ.மணியரசன்
`காவிரியைப் பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்க்க புதிய திட்டம்!’ - கொதிக்கும் பெ.மணியரசன்

ஆற்றுச் சமவெளி ஆணையம் உருவாக்குவதற்கான சட்ட வரைவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன் வைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் - 1956-ன் செயல்பாட்டை பெருமளவு சிதைத்துவிடும் எனவும் காவிரியைத் தனியார்மயமாக்குவதற்காகவே இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாகவும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் குற்றம் சாட்டுகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள், ஆற்றுச் சமவெளிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் இந்த ஆறுகளையும், ஆற்றுச் சமவெளிகளையும் கொண்டுவருவது பொது நலனுக்கு இன்றியமையாதது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது” என்று இச்சட்டப் பிரிவு 1 (3) கூறுகிறது. இச்சட்டத்தின்கீழ் காவிரி ஆறும் கொண்டுவரப்படுகிறது. இதுபோன்று, மேலும் 13 ஆறுகள் கொண்டுவரப்படுகின்றன. ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் இந்திய ஏகாதிபத்தியத்தின் கையில் குவித்துக்கொள்வது, அதன்பிறகு தண்ணீரையும், நீர் நிலைகளையும் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிடுவது என்பதுதான் இதன் நோக்கம்.

``தேசிய நீர் சட்டக வரைவு - 2016’’ என்ற பெயரில், தேசிய நீர்க் கொள்கையை மந்திய அரசு அறிவித்தபோதே,‘இது பேரழிவுத் திட்டம் - தமிழ்நாட்டின் நீர் உரிமையைப் பறிக்கும் சட்டம்’ என தமிழ்த் தேசிய பேரியக்கம் கண்டித்தது. ஒருங்கிணைந்த ஆற்றுச் சமவெளி மேலாண்மை என்ற பெயரில் (இச்சட்ட விதி 2 (i)) உருவாக்கும் “ஆற்றுச் சமவெளி ஆணையம்” அனைத்து அதிகாரங்களையும் கொண்டது, அதன் முடிவுகள் தொடர்புடைய மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என இச்சட்டத்தின் விதி 20 வரையறுக்கிறது. இந்த ஆற்றுச் சமவெளி ஆணையம் தேசியப் பெருந்திட்டம் ஒன்றை அறிவிக்கும் என்று இச்சட்டத்தின் அத்தியாயம் 4 கூறுகிறது. அதன்படி தண்ணீரும், ஆறு - ஏரி - குளம் - குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளும் தனியார்மயமாகும் என்பதைக் கூறுகிறது.

மாநிலங்களுக்கிடையில் ஏற்படும் தண்ணீர்த் தகராறுகளைத் தீர்ப்பதற்கு 1956 சட்டம் இருக்கிறது. இதன்படி, பக்ரா, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற மாநிலங்களுக்கிடையிலான ஆற்றுச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. அரசமைப்புச் சட்ட உறுப்பு 262-இன்கீழ் இச்சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், அரசமைப்புச் சட்டத்திற்கும் புறம்பாக இப்போதைய சட்ட வரைவில், மாநிலங்களுக்கிடையில் “தகராறு தீர்க்கும் பொறியமைவு” (Resolution Mechanism) நிறுவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை, சமரச முயற்சி என்று இழுத்துக்கொண்டிருப்பதற்குக் கூடுதலான ஒரு பொறியமைவை இது ஏற்படுத்தும்.

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப்படி, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை, புதிதாக உருவாக்கப்படும் ஆற்றுச் சமவெளி ஆணையத்தின்கீழ் அமைக்கும் நிர்வாக வாரியமே (Executive Board) செயல்படுத்தும். அதன்பிறகு, இப்பொழுதுள்ள காவிரி ஆணையம் - ஒழுங்காற்றுக் குழு ஆகியவை செயலற்றதாக மாறும். இப்பொழுதுள்ள காவிரி ஆணையம் பல குறைபாடுகள் உடையது என்றாலும், அதிகாரிகளைக் கொண்ட நிரந்தரப் பொறியமைவு அது. ஆனால், இப்புதிய சட்டம் காவிரிக்கென்று புதிதாக ஓர் ஆணையம் அமைக்கும். அதில் நான்கு மாநில பாசன அமைச்சர்களும், அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பார்கள். அதற்கான தலைவராக நான்கு மாநில முதலமைச்சர்களும் சுழற்சி முறையில் ஒருவருக்குப் பின் இன்னொருவர் என்று வருவார்கள். மீண்டும் பழையபடி கர்நாடகத்தின் “ரத்து அதிகாரத்திற்கு” உட்பட்டதாக காவிரி இறுதித் தீர்ப்பு மாற்றப்படும். இதற்கான வரைவு 2013ல் வந்தபோது, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அப்போதே எதிர்த்து நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதினார்.

மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீர்ச் சிக்கலைத் தீர்த்துவைப்பதற்கு 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் போதுமானதாகும். இப்போது முன்மொழியப்பட்டுள்ள ஆற்றுச் சமவெளி ஆணையச் சட்டம், தமிழ்நாட்டின் காவிரி உரிமையை முற்றிலும் பறித்து, காவிரியைப் பெரும் தனியார் நிறுவனங்களுக்குக் தாரைவார்க்கும் நோக்கம் கொண்டது. புதிய ஆணையம் செயலுக்கு வந்தால், இந்தியாவிலுள்ள எல்லா ஆறுகளையும் மந்திய அரசு தனியாருக்குத் தாரைவார்த்துவிடும். எனவே, மத்திய அரசு இந்த புதிய சட்டத்தைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு, பாண்டிச்சேரி அரசுகள் வலியுறுத்த வேண்டும். நாடளுமன்ற உறுப்பினர்களும் இதற்குக் குரல்கொடுக்க வேண்டும். இதை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாகப் போராட வேண்டும்” என்றார்.